உலக சாதனையில் முதலிடத்தில் இருந்த அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் சாதனையை ‘தில் பெச்சாரா’ படத்தின் விளம்பரக் காணொளி 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது. 23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படத்தின் விளம்பரக் காணொளி வெளியான 24 மணிநேரத்தில் உலக சாதனை படைத்துள்ளது. பேரறிமுகமான ஹிந்தி திரையுலக நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படம் நாளது 09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122 (24.07.2020) வெள்ளிக் கிழமை அன்று நேரடியாக எண்ணிமத் தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் விளம்பரக் காணொளியைப் படக்குழுவினர் வலையொளியில் வெளியிட்டார்கள். இந்த விளம்பரக காணொளி வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே உலக சாதனை படைக்குமளவிற்கு விருப்பங்களைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு வலையொளியில் வெளியான திரைப்பட விளம்பரக் காணொளிகளான அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மொத்தமாக 36 லட்சம் விருப்பங்களைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை ‘தில் பெச்சாரா’ படத்தின் விளம்பரக் காணொளி 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது. தற்போது வரை ‘தில் பெச்சாரா’ விளம்பரக் காணொளியை 50 லட்சம் விருப்பங்களுடன் 2.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தில் பெச்சாரா’ படத்தில் சுஷாந்த் சிங், சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



