தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மற்றும் உலக மக்கள் அனைவரிடமும் இயங்கலை வாக்கெடுப்பு நடத்தி உலக வியப்புகள் பட்டியலில் தஞ்சை பெரியகோயிலை இணைப்பதற்காக மாபெரும் கருத்துப்பரப்புதல் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தஞ்சை பெரியகோயில் ஒருங்கிணைப்புக் குழு! 01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வேளையில், பெரிய கோயிலை உலக வியப்புகளின் பட்டியலில் சேர்ப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். தஞ்சாவூரில் மாமன்னன் இராசராச சோழன் அவர்களால் கட்டப்பட்ட பெரியகோயில் உலகப் புகழ்பெற்று விளங்கி வருவதுடன், வானை முட்டி நிற்கும் தமிழின் உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கையில் 216 அடி கொண்ட விமானக் கோபுரத்துடன் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கெத்தாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. கட்டுமானத்திற்கான கருவி வாய்ப்புகள் எதுவும் இல்லாத காலத்திலேயே கற்களைக்கொண்டு சிறப்பாகக் கட்டப்பட்டுள்ள பெரியகோயிலை உலகக் கட்டடக் கலை வல்லுநர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். பெரிய கோயில் தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்துள்ளது. மேலும், யுனெஸ்கோவால் உலகப் பரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் துறை மற்றும் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயிலைக் காண அன்றாடம் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். சிறப்பாகக் கொண்டாடப்பட்ட அண்மைக் குடமுழுக்கு விழாவில் சுமார் 13,00,000 மக்கள் கலந்துகொண்டதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக வியப்புகளில் ஒன்றாக இக்கோவிலையும் இடம்பெற வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொல்லியல்துறையின் கட்டுமான வல்லுநரும் அறநிலையத்துறையின் கட்டுமான உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓய்வு பெற்ற தலைமைச் செயலர், இந்திய ஆட்சிபணித்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரைக்கொண்டு அக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே உலக வியப்புகள் ஏழுடன் சேர்த்து, எட்டாவது உலக வியப்பாக பெரிய கோயிலைச் சேர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையாக கோயிலின் பெருமை இன்னும் பல மடங்கு உலகம் முழுக்க எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதற்காக தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மற்றும் உலக மக்கள் அனைவரிடையே இயங்கலை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. உலக வியப்புப் பட்டியலில் இணைப்பதற்காக கோடிக்கணக்கானவர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



