எதேச்சையாக கிடைத்துவிட்ட பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவிக்க, ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி- பன்னீர் நிறைய செய்து விட்ட நிலையில், ஸ்டாலின் செய்யும் முதல் முத்தான முயற்சி பேரவைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம். 17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இடைத் தேர்தல் முடிவுக்குப் பின்னால் பன்னீர்- எடப்பாடி ஆட்சி கவிழும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,138.
ஆனாலும் இன்னும் கொஞ்ச காலம் ஆட்சியை நீட்டிப்பதற்கு தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைப்பதை ஒரு யுக்தியாக திட்டமிட்டு கண்டு பிடித்திருக்கின்றார்கள் எடப்பாடியும்- பன்னீரும்.
தற்போது அவர்கள் திட்டத்திற்கு பலிகடாவானவர்கள் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர். கட்டமைக்கப் பட்ட காரணம்: அவர்கள் தினகரனோடு நெருக்கமாக இருக்கிறார்களாம்.
அ.தி.மு.க.வில் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக கருத்துப்பரப்புதல் செய்தனராம். மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் பேரவைத்தலைவர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்துவிட்டார்.
தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே தனபாலைப் போல் ஆளுங்கட்சி சார்பாளர் இருக்க முடியாது என்று தொடர்ந்து நிரூபித்து வருகிற நிலையில், கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு- விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவைத்தலைவர் தனபால் இன்று அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் பேரவைத்தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார்.
ஏற்கனவே, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் மீது பேரவைத்தலைவர் அறிவிப்பு கொடுத்தால் பேரவைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.