Show all

தானுலங்கி (ட்ரோன்) தொழிற்நுட்பத்தில் முன்னோடியாகி வரும் தமிழ்நாடு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாநிலத்தை தானுலங்கி உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு அரசு ஆராய்ந்து வருகிறது. 

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாநிலத்தை தானுலங்கி உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு அரசு ஆராய்ந்து வருகிறது. 

அந்தக் காலத்தில் நாற்று நடுதல், களை பறித்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட வேலைகளை மனிதர்கள் கைத்தொழிலாக செய்து வந்தோம். அதனால் எதிர்பார்த்;த உற்பத்;தியை நிறைவேற்ற முடியாமல் இருந்து வந்தோம்.  

ஆனால் தற்போது அவை எல்லாவற்றிற்கும் இயந்திரங்களை உருவாக்கி விட்டோம். அந்த வகையில் சரக்குகளையும் பயணம் செய்யவும் போரிடவும் விமானங்களை உருவாக்கி விட்டோம். அதில் இருவர் மட்டுமே பயணிக்க உலங்கிகளையும் (ஹெலிகாப்டர்) உருவாக்கினோம். தற்போது டிரோன்கள் எனப்படும் ஆளில்லா தானுலங்கிகளை பல்வேறு துறைகளில் பயன்பட்டுக்கு கொண்டுவந்திருக்கிறோம்.  

வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், வனத்துறை, வனஉயிரி, கல்வி, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து மேலாண்மை, சுரங்கம் ஆகிய துறைகளில் தற்போது தானுலங்கிகள் (டிரோன்கள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண்துறையில் தானுலங்கிகள் திறம்பட செயல்படுகின்றன. பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை தானுலங்கிகள்; மூலம் தெளிக்கலாம். பூச்சிக்கொல்லிகளை மனிதர்கள் அடிக்கும் போது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். தானுலங்கிகள் பயன்பாட்டால் அந்தப் பாதிப்புகள் இல்லை. மேலும் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவுகளில் தானுலங்கிகள் மருந்துகளை அடிக்கும். அது போல் வெட்டுக்கிளி உள்ளிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்தவும் இந்த தானுலங்கிகளைக் கொண்டு பூச்சி மருந்து அடிக்கலாம். 

இவ்வளவு ஏன் கொரோனா நுண்நச்சு பல்கி பெருகி வரும் நிலையில் வீடுகள், உயர்ந்த கட்டடங்களில் தானுலங்கிகள் மூலமே நுண்நச்சு அழிப்புகள் தெளிக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு அதிக அளவிலான தானுலங்கிகள் தேவைப்படுகின்றன. 

குடிமராமத்து பணிகளும் தானுலங்கிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் முதன்மை மனிதர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவர்களுக்கு முறையின்மைகள் ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது. 

மருத்துவத் துறையில் உறுப்புகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு விரைவாக கொண்டு செல்ல தானுலங்கிகள் உதவுகின்றன. இவை மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடும். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பத்தை கொண்டு தமிழ்நாட்டை தானுலங்கிகள் உற்பத்தி மையமாக மாற்ற உரிய சாத்தியக் கூறுகளை தமிழ்நாடு அரசு ஆராய்ந்து வருகிறது. விரைவில் மாநில வளர்ச்சி கொள்கை ஆணையம் இது தொடர்பாக ஒரு ஆலோசனையை நடத்தியுள்ளது. எனவே விரைவில் தானுலங்கிகள் பேரளவில் உற்பத்தியும் பயன்பாடும் கொண்ட மண்ணாக மாற தமிழ்நாடு படு வேகத்தில் முன்னேறி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.