Show all

திருவண்ணாமலை ஆட்சியர் முன்னெடுக்கவிருக்கும் பாதுகாப்புக்கான செயல்திட்டம்! நிவாரணத் தொகை 1,000 ரூபாய் வீடு தேடி வரும்

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணத்தொகை ரூபாய் ஆயிரம்; குடும்பஅட்டைதாரருக்கு உரிய நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கப்படும் எனத் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்து இருக்கிறார்.

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணத்தொகை ரூபாய் ஆயிரம்; குடும்பஅட்டைதாரருக்கு உரிய நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கப்படும் எனத் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நிலையை உணர்ந்து, தமிழக அரசு அனைத்துக் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணமும், அதோடு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருள்களை விலையின்றி வழங்கப்படும் என அறிவித்தது. இந்தநிலையில், நிவாரணத்தொகை 1,000 ரூபாயைக் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்படும் எனத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசு வழங்கும் நிவாரணத்தைப் பெறுவதற்காக கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்று கூடிவிடுவார்கள். அந்தச் சமயத்தில் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாட்டைச் செய்யவுள்ளோம். ஒவ்வொரு நியாய விலைக் கடைகளின் கீழ் 300 முதல் 1,000 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே இருப்பார்கள்.

அதனால், அந்தந்த நியாயவிலைக்கடை பணியாளர்களை வைத்து மிக விரைவாக நிவாரணத் தொகையைக் கொடுத்துவிடலாம். என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.