பெரியகோவிலைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு ஆழ்துளை கிணறு தோண்டக் கூடாது என்று தொல்லியல் துறையின் அறிவுறுத்தல் இருந்தும், மாநகராட்சி 500 அடி ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்தது ஏன்? பரபரப்பில் தஞ்சை. 25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொல்லியல் துறையின் அறிவுறுத்தலின்படி, பெரியகோவிலைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு ஆழ்துளை கிணறு தோண்டக் கூடாது. அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அது 216 அடி மற்றும் ஒன்றரை லட்சம் டன் எடையுள்ள பெரியகோவிலின் கட்டுமானத்தை பெரிய அளவில் பாதிக்கும். ஆனால் தற்போது அங்கு இராசராசசோழன் சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள பூங்காவை பராமரிப்பதற்காக ஆழ்துளை கிணறு தோண்டப் படுகிறது. தஞ்சை மாநகராட்சி சார்பாக 500 அடி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முந்;தாநாள் மாலை தொடங்கியது. நேற்றும் பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில், அறங்கூற்றுமன்றத்தில் தடை உத்தரவு பெற்று மாநகராட்சிக்கு கவனஅறிக்கை அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இராசராசசோழன் சிலை உள்ள பூங்கா மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவிலுள்ள மரங்கள் மற்றும் செடிகள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது. அதனால்தான் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரிடமும் அனுமதி பெறவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் கம்பீரமாக இருக்கும் சிறந்த கட்டுமானம். உலக மரபுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட, யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட்டுவரும், சோழர்கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சிறப்பு. அதை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை, என்று தொல்லியல் துறை அறிவுறுத்தியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,209.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



