19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆளுநர் பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரம் பெரிதானதை அடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் அந்த பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகவும் அருவருப்பாகவும் பதிவிட்டிருந்தார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் தமிழகம் முழுதும் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகர் அணியமாகமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் முன் பிணை கோரி உயர் அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்த மனுவை தள்ளுபடி செய்த அறங்கூற்றுவர் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். அவரை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறை மீது அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் அறங்கூற்றுமன்றத்தில் முன் பிணை கேட்டு மனு பதிகை செய்தார். அதனை விசாரித்த அறங்கூற்றுமன்றம் நோற்று வரை எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி. சேகருக்கு முன்பிணை வழங்க மறுப்பு தெரிவித்த அறங்கூற்றுமன்றம் அவரை கைது செய்ய விதித்திருந்த தடையை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அணியமாக வேண்டும் என்று அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். எஸ்வி சேகருக்கு முன்பிணை மறுக்கப்பட்டதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,806.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



