Show all

தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தினகரன் தரப்பினர் முடிவு

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் அறங்கூற்றுமன்ற 3வது அறங்கூற்றுவர் சத்யநாராயணன் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்ய தினகரன் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

மதுரையில் தினகரன் தனக்கு ஆதரவாக உள்ள, தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ் செல்வன், அவைத் தலைவர் செய்தது தவறு என்பது உலகிற்கு எடுத்துக் காட்ட தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதற்கு இடையில் இடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட்டு தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். 100 விழுக்காடு வெற்றி  பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேல்முறையீடு செய்ய 18 பேரும் ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம். வழக்கை விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்ச அறங்கூற்று மன்றத்தில் வலியுறுத்வோம். 

அதிகாரத்தை வைத்து எங்களை அரசு தண்டிப்பதாக கருதுகிறோம். நாங்கள் தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை. உச்ச அறங்கூற்றுமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் போட்டியிடும் போது, எங்களது வேட்புமனுவை அரசு தரப்பு நிராகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. என்பதையும் நாங்கள் அறிவோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,952.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.