09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிப்பைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 1. திருவாரூர், 2.திருப்பரங்குன்றம், 3. ஆண்டிப்பட்டி, 4. பெரம்பூர், 5. அரவக்குறிச்சி, 6.பாப்பிரெட்டிபட்டி, 7. பெரியகுளம், 8.பூந்தமல்லி, 9.அரூர், 10.பரமக்குடி, 11. மானாமதுரை, 12.சோளிங்கர், 13.திருப்போரூர், 14.ஒட்டப்பிடாரம், 15.தஞ்சாவூர், 16. நிலக்கோட்டை, 17. ஆம்பூர், 18. சாத்தூர், 19. குடியாத்தம், 20. விளாத்திகுளம். அரசியல் சாசன சட்ட விதிகளின்படி இந்த 20 தொகுதிகளுக்கும், காலி இடமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் முழுமையாக ஆறு மாதங்களில் நடுவண் அரசில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு ஆட்சிக் காலம் முடிகிறது. எனவே பாராளுமன்றத்துக்கும் ஆறுமாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு: 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் உயர்அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து 18 தொகுதிகள் காலியாகி உள்ளன. இது தொடர்பாக உயர்அறங்கூற்றுமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆவணங்களை நாங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். இனி அவர்கள்தான் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்வார்கள். பெரும்பாலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. 20 தொகுதிகளில் இடைத்தேர்தலில் கணிசமாக வெற்றி பெறுவதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அதே புத்துணர்ச்சியுடன் களம் இறங்கலாம் என்று தி.மு.க. கருதுகிறது. மேலும் 20 தொகுதி இடைத்தேர்தல் மூலம் புதிய கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகளை நடத்தலாம் என்றும் தி.மு.க. நினைக்கிறது. தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பது இதுவே முதல் முறையாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,952.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



