அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயருக்கு சசிகலா, பன்னீர் ஆகிய இரு அணியினரும் உரிமை கோரியதால் சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. கட்சி சின்னம், பெயருக்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனில் இரு அணியினரும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் சின்னம், கட்சி பெயர் தொடர்பான வழக்கில் அக்டோபர் 31க்குள் தேர்தல் ஆணையம் முடிவு அறிவிக்க வேண்டும் என்று மதுரை உயர்அறங்கூற்றுமன்றக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து சின்னம், கட்சி பெயர் தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையம் முன் 6 இன்று நடைபெறும் என்றும் விசாரணைக்கு அணியமாகுமாறும் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையம் தகவல் அனுப்பியது. இதற்கிடையே சசிகலா அணியில் தினகரன் தனித்து விடப்பட்டு, சசிகலா அணியால் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடியார் எதிரி பன்னீர் அணியோடு ஐக்கியமாகி குளறுபடி ஏற்படுத்தி விட்ட நிலையில், தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு தினகரன் தரப்பு அளித்த கோரிக்கையை தேர்தல் ஆணையமும் நிராகரித்தது. இதை எதிர்த்து தினகரன் மதுரை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை தொடங்கிய நிலையில் இதற்கு தடை விதிக்க கோரி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அறங்கூற்றுவர் இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்தால் தேர்தல் ஆணையம் இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகள் பாதிக்கப்படும் எனக்கூறி தினகரன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மாலை இரட்டை இலை தொடர்பாக சுமார் 2 மணி நேரம் தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. முதலமைச்சர், பன்னீர் அணி சார்பில் வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதங்களை தொடங்கினார். தினகரன் அணி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் வழங்கக்கூடாது எனவும், ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள், அவர்களில் 95விழுக்காடு தங்கள் பக்கமே உள்ளனர் எனவும் முதலமைச்சர், பன்னீர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம் வழக்கு விசாரணையை வருகிற 13 க்கு ஒத்திவைத்தது. தினகரன் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



