Show all

புதிய ஜாவா பைக் தீப்பற்றி எரிந்து நாசம்! வாங்கி இரண்டு நாட்கள்தாம் ஆகிறதாம்.

வாங்கி இரண்டு நாட்களேயான நிலையில், சென்னை பம்மல் பகுதியில், புதிதாக வாங்கப்பட்ட ஜாவா பைக் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து வாகனம் முழுவதும் சேதமடைந்தது. அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் மூவேந்தர் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியில், வாங்கி இரண்டு நாட்களேயான ஜாவா பைக் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து வாகனம் முழுவதும் சேதமடைந்தது.  

அண்ணன் தம்பிகளான சீனிவாசன் மற்றும் சதீஷ் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நள்ளிரவு ஒரு மணி அளவில் இரண்டு வாகனங்களும் திடீரென தீப்பற்றி எரிந்தன. 

வீட்டில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும் தாம்பரம் சானிடோரியம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், அதற்குள் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறின. 

இதுகுறித்து பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரண்டு பைக்குகளில், ஒன்று புதியதாக இரண்டு நாட்களுக்கு முன்புதான் வாங்கப் பட்டதாம். வாங்கி 2 நாட்களே ஆன புதிய ஜாவா பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதில் ஏதேனும் தொழில் நுட்ப கோளாறு உள்ளதா அல்லது வெளி நபர்கள் யாராவது வீட்டுக்குள் சென்று தீ வைத்து எரித்தனரா என்று விசாரித்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,203.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.