தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காப்பாளர்கள் உள்ளிட்ட 8,888 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில், தேறியவர்களுக்கான பட்டியல் நடப்பு மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் 1019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனக் கூறி, இந்த முன்னெடுப்பு தொடர்பாக நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட கோரி அன்பரசன், செல்வம் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது:- தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர் தேர்விலும் முறைகேடு நடைபெறுவதால், அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள் என்று அறங்கூற்றுவர் கவலை தெரிவித்தார். அரசு தரப்பில் அணியமான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்தப் புகார் தொடர்பாக அரசு பதிகை செய்யும் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அறங்கூற்றுவர், காவலர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், இந்த மனு மீது இரண்டு கிழமைக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். நடுவண் அரசின் கட்டுப்பாட்டில், மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடைபெறும் நீட் தேர்விலும் முறைகேடு நடைபெற்று வழக்கு கைதுகள் நடைபெறுகின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் அரசு பணியில் சேர்த்துக் கொள்வதற்கான அனைத்து அரசு பணியாளர் தேர்விலும் முறைகேடு நடைபெற்று வழக்கு கைதுகள் நடைபெறுகின்றன. எனில் இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எதுவும் இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. தேர்வுகள் என்பனவே முதன்மைப்பாட்டைத் தாண்டி, ‘தகுதிப்பாடு’ என்கிற ஒரு பொய்யான முன்னெடுப்புக்கான கருவியாகவே காணப்படுகிறது அல்லவா? ஒவ்வொரு பணிக்குமாக ஒவ்வொரு கல்வித்தகுதி முன்வைக்கப்படுகிறது. இதில் ஒரு பணிக்கான கேட்புக் கல்வித் தகுதியிலிருந்து, எல்லையில்லாத கூடுதல் கல்வித்தகுதிவரை உள்ள அனைவரையும் ஒரே தட்டில் நிறுத்தி, அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் தகுதிப்பாடு என்கிற தலைப்பில் தேர்வு மற்றும் முறைகேட்டில் பணி வழங்கப்பட்டு வருகிறது. தேர்வோடு, முறைகேடும் தகுதிப்பாட்டு தலைப்பில் காலங்காலமாக இடம் பெற்று வருகிறது. சில நேரங்களில் வழக்குகள் கைதுகளால் முறைகேட்டாளர்கள் தண்டனை பெறுகிறார்கள். இதில் சமுதாயத்திற்கு எந்த இலாபமும் ஏற்படுவதாகக் காணோம். குறைந்த கல்வித்தகுதி உள்ளவர்கள் தங்கள் கல்வித்தகுதிக்கு என்று ஒதுக்கப்பட்ட பணிகளில் கூட சுதந்திரமாக சேரும் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு கல்வித்தகுதியிலும் முதன்மைபாட்டு வரிசையெண் அடிப்படையில், அந்தக் கல்வித்தகுதிக்கு உள்ள வேலை வாய்ப்பில், வரிசையாக வேலை வழங்கி விட்டுப் போகவேண்டியதுதானே.
மேலும், குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள் என்றும்-
அனைவரும் எப்படி ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றார்கள் என்றும்- தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றது எப்படி என்றும்- கேள்வியெழுப்பினார் அறங்கூற்றுவர்,
உண்மையில் தேர்வு என்பது முறைகேடு. முறைகேடு சரியென்றும், முறைகேட்டில் முறைகேடு தண்டனைக்குரியது என்றும் நாம் சட்டம் வகுத்;துக் கொண்டுள்ளோம். சமுதாயத்தில் முதன்மைபாட்டு வரிசையைக் கலைத்து முந்தியடித்தலுக்கு வழிவகுக்கும் கூட்டமாகிக் கொண்டிருக்கிறோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



