உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இரஜினிகாந்திடம் அவரது மகள்கள், “அரசியல் வேண்டாமே அப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இரஜினிகாந்திடம் அவரது மகள்கள், “அரசியல் வேண்டாமே அப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தை மாதத்தில் கட்சித் தொடங்கப்போவதாக, அதற்கான நாள் குறித்து அவர் அறிவிக்கப் போவதாக குறிப்பிட்ட நாளும் நாளை மறுநாளில் வரப் போகிறது. இன்னும் 48மணிநேரத்திற்குள் தை மாதத்தில் கட்சி தொடங்கும் அந்த நாள் எந்த நாள் என்று அறிவிப்பார் இரஜினிகாந்த் என்ற ஆர்வம், உலக அளவிலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சிலரின் ஆர்வம் நேர்மறையானது என்பதும், பலரின் ஆர்வம் எதிர்மறையானது என்பதும் இங்;கே குறித்துக் கொள்ள வேண்டிய செய்தியும் ஆகும். இதனிடையே, அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் இரஜினிகாந்த். இந்தச் சூழலில் அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகின. தொடர்ந்து, ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த இரஜினி, திடீரென அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறுதி அழுத்த மாறுபாடு காரணமாக உடனடி சிகிச்சை தேவைப்பட்டதால் நடிகர் இரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் மருத்துவச் சிகிச்சையில் இருந்து விடுபட அனுமதிக்கப்பட்டு, உடனடியாக சென்னை திரும்பியுள்ளார். ஆனாலும், முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும், மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் இரஜினிகாந்தை அறிவுறுத்தியுள்ளார்கள். இரஜினியின் அரசியல் வருகை குறித்த திட்டவட்ட அறிவிப்பால் அவரது கொண்டாடிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, கட்சி பணிகளுக்கான வேலைகளை இரஜினி முடுக்கி விட்டுள்ளார். இந்த சூழலில் ரஜினியின் உடல் நிலை குறித்த தகவல்களால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். திட்டமிட்டபடி கட்சி தொடங்கப்படுமா என்று அவர்கள் கேட்கத் தொடங்கியதற்கிடையே, கீச்சு மூலம் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இரஜினிகாந்தின் இரு மகள்களும், தங்கள் அப்பா இருக்கிற உடல்நிலையில், அவருக்கு அரசியல் வேண்டாம் என்று கருதுகின்றனர். இதனால், ‘அரசியல் வேண்டாமே அப்பா!’ என்று இரஜினியின் மகள்கள் அப்பாவுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலைதான் முதன்மை என்றும், இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் எளிதில் கொரோனா ஏற்படும் அபாயம் இருக்கிறது. தற்போது அரசியல் குறித்து அவர் அதிகமாக சிந்திப்பதால் குறுதி அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படுவதை சுட்டிக் காட்டியுள்ள இரஜினியின் மகள்கள், அரசியல் வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.