இலஞ்சம் ஊழல் என்று பாஜக ஆட்சிக்கு வரும்வரை போராடிக் கொண்டிருந்த தாத்தா அன்னஹசேரே தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரின் எச்ச சொச்சமாக பெயருக்கு டெல்லியை மட்டும் கைப்பற்றி ஆண்டு வரும் அரவிந்த் கொஜ்ரிவால். இந்த நிலையில்தான் தமிழகத்தில் கிளம்பியிருக்கிறார் நம்ம கமல். தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுகின்றனர் என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டி, பட்டியலும் வெளியிட்டு இலஞ்சம் ஊழல் தலைப்பைக் கையில் எடுத்துள்ளார். 13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இலஞ்சம் ஊழல் என்று பாஜக ஆட்சிக்கு வரும்வரை போராடிக் கொண்டிருந்த தாத்தா அன்னஹசேரே தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரின் எச்ச சொச்சமாக பெயருக்கு டெல்லியை மட்டும் கைப்பற்றி ஆண்டு வரும் அரவிந்த் கொஜ்ரிவால் அந்த நோக்கத்திற்காக எதுவும் சாதித்ததாகவே தெரியவில்லை; சுற்றுச்சூழல் மாசுப்புகையில் மறைந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் தமிழகத்தில் கிளம்பியிருக்கிறார் நம்ம கமல். தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுகின்றனர் என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டி, பட்டியலும் வெளியிட்டு இலஞ்சம் ஊழல் தலைப்பைக் கையில் எடுத்துள்ளார். தமிழகச் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களுக்கான முதல் கட்ட கருத்துப்பரப்புதல் சுற்றுப்பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளார். இதற்கிடையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ‘தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது. தமிழகத்தில் குழந்தை பிறப்பு முதல் குடும்ப அட்டை, பட்டா, சொத்து வரி, மின் இணைப்பு வரை லஞ்சம். அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூபாய் 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூபாய் 500 லஞ்சம் பெறுகின்றனர். என்று பட்டியல் இட்டு தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இலஞ்சம், ஊழல் என்பது நூறு விழுக்காடு நிருவாகம் சார்ந்தது. மனிதன் வருமானம் ஈட்டுவதற்கான துறைகள் தொழில், வணிகம், தனித்திறமை வேலைவாய்ப்பு என்பனவாகும். இந்த வேலைவாய்ப்பில் உடலுழைப்புக் தளம், நிருவாகக் தளம் என்று இருவகையினர் ஆவர். அரசிலும், தனியாரிலும் இருக்கிற இந்த நிருவாகத் தளத்தினர்தான் இலஞ்சத்திலும் ஊழலிலும் பயனடைகிறவர்கள். மற்ற துறையினர் இந்த இலஞ்சத்தாலும், ஊழலாலும் கொடுக்க முடியாமல் பாதிக்கப்படுகிறவர்கள், அல்லது இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் நிருவாகக் களத்தினருக்குப் பயன்அளிக்கிறவர்கள். கமல் அவர்கள் இதுவரை தனித்திறமை என்ற நடிப்புத்துறையில் இருந்து தற்போது அரசியல் என்கிற நிருவாகத் தளத்திற்கு முனையத் தொடங்கியிருக்கிறார். நேற்று இருந்த துறையில் ஒரு காசு கூட இலஞ்சம் ஊழலுக்கு பயன்அளிக்க வில்லை என்று நிரூபிப்பாரேயானால், இந்தத் துறையில் அவர் இலஞ்சம் ஊழலால் பயனடையாமலும், பயனடைகிறவர்களைத் தடுக்கும் நிருவாகத்திற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியும். அந்த வகைக்கு- அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் அவர் களமிறங்க நினைக்கும் தமிழக ஆட்சிக்கு இல்லவே இல்லை என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்தி. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் ஆட்சி என்பதே நிருவாகமாக இருக்கிறது. அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில்தான் நடக்கிறது. இந்தியாவின் தேசிய வருவாய் முழுக்க முழுக்க வரிகளும் நிருவாகக் கட்டணங்களும் மட்டுமே. அரசு நிறுவனங்கள் என்று சில பல உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும் அவைகளின் நட்டக் கணக்கை மக்கள் செலுத்தும் வரிகள்தான் ஈடு செய்கின்றன. பல நாடுகளின் தேசிய வருவாய் சுற்றுலா மூலமும், கருவிகள் மூலமும், கனிம வளங்கள் மூலமும், வேளாண்மை மூலமும், மருத்துவம், மருந்துப் பொருட்கள் மூலமும், அமெரிக்க போன்ற நாடுகளின் தேசிய வருவாய் ஆயுதத் தளவாடங்கள் மூலமும், அரபு நாடுகளின் வருவாய் எண்ணெய் வளங்கள் மூலமும் என்பதாக அரசின் தேசிய வருவாய் உற்பத்தியாக இருப்பதால், அங்கே அளவுக்கு அதிகமான, மறுஉற்பத்தி சாராத நிருவாகம் மற்றும் அதிகாரிகள் இல்லை. இந்தியாவில் ஒன்றிய ஆட்சியில் ஹிந்தி பேசுகிறவர்களை தலைமையாகக் கொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக மட்டுமே ஆளுகிற வரை, நிருவாகத்தையும், அதிகாரத்தையும் குறைத்துக் கொள்வதற்கான சிந்தனைக்கே வாய்ப்பு இல்லை. மாநிலக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஒன்றிய ஆட்சியில் முன்னெடுக்கப் படுகிற வரை- நிருவாகத்தைக் குறைத்து அல்லது முழுமையாக அப்புறப்படுத்தி, இலஞ்சம் ஊழலுக்கு முடிவு கட்டுவது பகல்கனவே. பாஜகவுக்கோ, காங்கிரசுக்கோ பணிந்துபோக வேண்டிய கட்டாயம் மாநிலக் கட்சிகளுக்கும், மாநிலக்கட்சிகளின் ஊழலை மிரட்டிப் பணிய வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிற பாஜக மற்றும் காங்கிரசின் நிலைப்பாட்டிற்கும் இலஞ்சம் ஊழலும் நிபந்தனையாக்கப்பட்டு வருகின்றன. மாநிலக் கட்சிகளின் இலஞ்சமும் ஊழலும் மட்டுமே வெளிக் கொணரப்படுகிற நிலையும், ஒன்றிய ஆட்சிக்கு முனையும் காங்கிரஸ் பாஜகவின் இலஞ்சம் ஊழலை அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளாத நிலையும், அவர்கள் ஏதோ சமூக சேவைக்கு அரசியலில் முனைவது போல மக்களுக்கு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். மாநில ஆட்சிகளின் மீது ஒன்றிய ஆட்சியின் மேலதிகாரம் அப்புறப்படுத்தப்படாத வரை- ஒன்றிய ஆட்சியில், மாநில மக்கள் அங்கீகரிக்கும் வகைக்கு மாநிலக்கட்சிகள் அமைத்துக் கொண்ட கொள்கைகளுக்கும் நோக்கத்திற்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாத வரை இலஞ்சம் ஊழல் ஒழிப்புக்கு சாத்தியமே இல்லை. இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் தண்டனை வழங்கிட அன்னஹசாரே தாத்தா முன்மொழிந்த லோக்பால், லோக் ஆயுக்தா எல்லாம் வெறுமனே கண்துடைப்புகளாகவே அமைய முடியும். அதை பெயர் தெரியாத கவிஞர் ஒருவர் எழுதிய இந்த கவிதை அழகாக வெளிப்படுத்தும். நாம் வருமானம் ஈட்டி அவரவர் மனைவி, மக்கள், பெற்றோர், அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து, வசதிகள், கல்வி, திருமணம், என அனைத்தையும் அமைத்துக் கொள்வதோடு, அரசுக்கு வரியும் செலுத்துகிறோம். அதுபோல அரசும், மறு உற்பத்தி சாராத வரியே இல்லாமல், அதற்கான நிருவாகமே இல்லாமல், அந்த வகைக்கு உடன் படாதவர்களை தண்டிக்க அறங்கூற்றுமன்றம் உள்ளிட்ட துறைகளே இல்லாமல், மொத்தத்தில் அதிகாரிகளே இல்லாமல், நம்மைப் போல் வருமானம் ஈட்டி ஆள முடியும். இந்தியாவில் அது சாத்தியமானால் மட்டுமே இலஞ்சமும் ஊழலும் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற முடியும்.
“இலஞ்சம் வாங்கினேன் பிடித்தார்கள்.
இலஞ்சம் கொடுத்தேன் விட்டு விட்டார்கள்.”
என்பதாகும் அந்தக் கவிதை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.