Show all

தேமுதிக: திமுக கூட்டணிக்கு முன்னுரிமை! திமுக கூட்டணி என்றால் 5ம்1ம் போதும்; அதிமுக கூட்டணி என்றால் 7ம்1ம் வேண்டும்

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  திமுக கூட்டணியில் சேர்வதானால் 5 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கவேண்டும் என்று தேமுதிக திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்சுற்று பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட திமுகவும், காங்கிரசும் தேமுதிகவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவும் தேமுதிகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் முதல்சுற்று பேச்சுவார்த்தையை திமுக முடித்துள்ளது.

தங்கள் கூட்டணிக்கு பாமகவை கொண்டுவர திமுக, காங்கிரஸ் முயற்சித்து வந்த நிலையில் திடீரென அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. இதனால் திமுகவும், காங்கிரசும் தற்போது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்ததாக ஸ்டாலின் கூறினாலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருடன், கூட்டணி குறித்து ஸ்டாலின் பேசியதாகவே கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, என்.ஆர்.காங்கிரஸுக்கு 1என 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதிமுக 20 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக தயாராக இருந்தது. ஆனால், பாமக போல 7 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடத்தை தேமுதிக கேட்டது. இதனால் அதிமுக-தேமுதிக இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

அதே நேரம், தேமுதிகவை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணமும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் காணப்படுகிறது. தேமுதிக தங்கள்கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை கூட்டணிக் கட்சிகளான பாஜகவும், பாமகவும் விரும்புகின்றன. இதனால், சுதீஷ் உள்ளிட்டோருடன் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

கும்பகோணத்தில் நடந்த தேமுதிக கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், 'தேமுதிக பலம் எங்களுக்கு தெரியும். எங்களுக்கு 3, 4 ஒதுக்க நீங்கள் யார்? என் தந்தையின் உடல்நிலை குறித்து பேசியவர்கள் இன்று எங்கள் வீட்டு வாசலில் காத்து நிற்கின்றனர்' என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர திமுககூட்டணியும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ்தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10தொகுதிகளில் ஒன்றை விட்டுத்தரவும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், 'குறைந்தது 6 தொகுதிகளாவது வேண்டும். ஒருவேளை 5 தொகுதிகள் என்றால், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க வேண்டும்' என்று தேமுதிக தீர்மானமாக கூறிவிட்டது. முந்திக் கொள்ளப் போவது திமுகவா? அதிமுகவா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,073. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.