Show all

திமுகவிற்கு தலைவலி! துப்பாக்கிச்சூடு தொடர்பில், திமுக சமஉ இதயவர்மனுக்கு 15 நாட்கள் அறங்கூற்றுமன்ற காவல்

துப்பாக்கிச்சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திருப்போரூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனை 15 நாட்கள் அறங்கூற்றுமன்றக் காவலில் வைக்க செங்கல்பட்டு அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்பகை இருந்து வந்தது.

இந்நிலையில், செங்காடு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக இன்று இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்தச் சண்டையில் இமயம் குமாருடன் வந்த கும்பல் திடீரென திமுக சட்டமன்ற உறுப்பினரின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.

இந்த சண்டையில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையில் இந்த மோதல் தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உள்பட இரு அணிகள் தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் செங்கல்பட்டு அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட செங்கல்பட்டு அறங்கூற்றுமன்றம் கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உள்பட 7 பேரை 15 நாட்கள் அறங்கூற்றுமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உள்ளிட்ட 7 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.