சாத்தான்குளத்தில் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற, காவல்துறை துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் இரகுகணேசன் ஆகியோர் மீது நான்கு மாதத்துக்கு முன்னாலயே நாங்க கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என வருத்தப்படுகிறார், ஜெபசிங். 13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் காவல்துறை கொடூர துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் இரகுகணேசன் ஆகியோர் மீது நான்கு மாதத்துக்கு முன்னாலயே நாங்க கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என வருத்தப்படுகிறார், ஜெபசிங். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொடூர துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் இரகுகணேசன் இருவரும் தாக்கியதில் தந்தை, மகன் ஆகியோர் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பேரறிமுகங்கள், துடுப்பாட்ட வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்தக் கொடூர நிகழ்வைக் கண்டித்துள்ளனர். பாலகிருஷ்ணன், ரகு கணேசன் ஆகிய இரண்டு காவல் துணை ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கொலைக் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையை வழங்கிட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. சர்சைக்குரிய பாலகிருஷ்ணன், ரகு கணேசன் மீதான புகார்கள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன. கொலை வழக்கு தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு மகேந்திரன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்ததில் மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது. அதே கொலை வழக்கில் தொடர்புடைய ராஜாசிங் என்பவரையும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அடித்தது போல காவல்ஆய்வாளர் சிறிதர், துணை காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் ஆகியோர் அடித்துள்ளனர். அதன் பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட ராஜாசிங் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழனியப்பபுரத்தைச் சேர்ந்த மதபோதகரான லாசர் பர்னபாஸ் உள்ளிட்ட 9 பேர் புளியங்குளம் கிராமத்தில் ஜெபக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். அனுமதியில்லாமல் கூட்டம் நடத்திய அவர்களை சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதில் லாசர் பர்னபாஸ் மற்றும் அவரது நண்பர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இது குறித்து பேசிய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சிலின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஜெபசிங், பாஸ்டர் லாசர் பர்னபாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து புளியங்குளம் பகுதியில் ஜெபகூடுகை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த காவலர்கள் அனைவரையும் காவல்நியைத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து சாத்தான்குளம் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் ஆகியோர் எந்தக் காரணமும் இல்லாமல் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். லாசர் பர்னபாஸின் முதுகுத் தண்டுவடம், ஆசனவாய் ஆகிய இடங்களில் அடித்துள்ளனர். விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை நிர்வாணப்படுத்தி பின்பகுதி, ஆண்குறி ஆகியவற்றிலும் அடித்திருக்கிறார்கள். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அய்யாத்துரை என்பவர் மாற்றுத் திறனாளி. அதைக்கூடப் பொருட்படுத்தாமல் மாற்றுத் திறன் ஏற்பட்ட காலிலேயே அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். போலீஸ் நிலையத்தில் நடக்கும் அத்துமீறல் பற்றிக் கேள்விப்பட்ட கருங்கடல் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான நல்லதம்பி என்பவர் காவல்நிலையத்துக்குச் சென்று சமாதானம் செய்திருக்கிறார். அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விரட்டியிருக்கிறார்கள். காவல் நிலைய அத்துமீறல் பற்றிக் கேள்விப்பட்ட கிராம மக்கள், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் முன்பாகத் திரண்டு விட்டார்கள். அதன் பிறகுதான் 9 பேரையும் வெளியில் விட்டாங்க. வெளியில் வரும்போது நாலஞ்சு பேரால் சரியா நடக்கவே முடியலை. மாற்றுத்திறனாளியான அய்யாத்துரை, ராமேசுவரம் சென்று விட்டார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சையில் இருந்த பிறகே அவர் குணமடைந்தார். மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள். காரணமே இல்லாமல் 9 பேர் தாக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினோம். பிப்ரவரி காவல்துறை தலைவர் அலுவலகத்தில் நேரில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநில சிறுபான்மை ஆணையத்திலும் புகார் செய்தோம். சிறுபான்மை ஆணையத்திலிருந்து காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு கவனஅறிக்கை அனுப்பினார்கள். அதனால் காவல்துறைக் கண்காணிப்பாளர் எங்களை அழைத்து, புகாரை திரும்பப் பொறுங்கள். பாலகிருஷ்ணனையும், ரகு கணேசனையும் மன்னிப்பு கேட்கச் சொல்லுறேன்’ என்றார். நாங்கள் அதற்கு உடன்படவில்லை. இந்த முன்னெடுப்பு பற்றி விசாரணை நடப்பதற்கு முன்பாகவே கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது. அதனால் விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது. நான்கு மாதங்களுக்கு முன்பு நாங்கள் கொடுத்த புகாரில் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இரு அப்பாவி உயிர்கள் தப்பியிருக்கும். நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நாங்க அந்த துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் செயல்பாடுகள் சரியில்லை என்று புகார் கொடுத்திருந்தோம். எங்கள் புகார் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இரு அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்காது” என்று வருத்தப்பட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



