லடாக் எல்லையில் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய - சீன எல்லையான லடாக்கில் நடந்த மோதலில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ராணுவ வீரர் பழனி வீர மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், நிவாரண நிதியாக, 20 லட்சம் ரூபாய் மற்றும் தகுதி அடிப்படையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல், என்.தியாகராஜன் கூறியதாவது: ஒவ்வொரு இராணுவ வீரரின் இறப்பு என்பது, நாட்டிற்கும், வீட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. இராணுவ வீரர் பழனியின் குடும்பத்தை பார்க்கும் போது, அவருக்கு எட்டு மற்றும் 10 அகவையில் குழந்தைகள் உள்ளனர். பரிதாபமான நிலையில், அவர்களது குடும்பம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு இது போன்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தை பாதுகாப்பதை, நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதை, தலையாய கடமையாக செய்து வருவதைப் பாராட்டுகின்றேன். என்று தெரிவித்துள்ளார். நடுவண் அரசின் முன்னெடுப்பாக- லடாக் எல்லையில் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் சொந்த கிராமத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் சதன்பிரபாகர் (பரமக்குடி), எஸ்.கருணாஸ் (திருவாடானை), மலேசியாபாண்டியன் (முதுகுளத்தூர்) மற்றும் திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், அமமுக மாவட்டச் செயலர் வ.து.ஆனந்த், தேமுதிக மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் அரசியல் கட்சியினர், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



