தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அணி 2, தேர்வில் மொழித்தாள் பாடம் நீக்கப்பட்டது மிகப்பெரும் சதிச்செயல் என்றும், தமிழக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அணி 2 தேர்வில் மொழித்தாள் பாடத்தை நீக்கிய தமிழக அரசுக்கு- தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வந்தேறிக் கும்பல் துணைக்கண்டத்திற்குள் புகுந்த ஈராயிரம் ஆண்டுகளிலிருந்தே தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரான சதிச் செயல்களை செய்து வருகின்றது. இதன் தற்போதைய தொடர்ச்சியாக, 5ஆம் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று பிஞ்சிலேயே பிள்ளைகளை வடிகட்டி இடைநிற்றலை ஊக்குவித்து கல்வியை மறுக்கின்ற கயமைச் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்திலுள்ள ஒன்றிய அரசுப் பணிகள் மற்றும் ஒன்றிய நிறுவனப் பணிகளில் ஹிந்தி பேசுவோரை நுழைத்து தமிழர்களைப் புறந்தள்ளுதல், தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரும் சேரும்படி விதிகளை வளைத்தல், என இருந்தவர்கள் இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அணி 2 தேர்விலேயே கைவைத்துவிட்டார்கள். அணி 2 தேர்வின் பாடத்திட்டத்தை மாற்றுவதாகச் சொல்லி அதில் இருந்துவந்த மொழித்தாளை நீக்கிவிட்டார்கள். நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான பாடத்திட்டம் சார்ந்தது இந்த மொழித்தாள் ஆகும். ஏன் இதை மாற்றினார்கள் என்பது தெரியாததல்ல. வெளி மாநிலத்தவர், குறிப்பாக ஹிந்தி பேசுவோரை தமிழ்நாடு அரசின் உயர் பதவிகளுக்குக் கொண்டுவருவது; அதன்மூலம் தமிழர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து அவர்களை நிர்கதியில் தள்ளுவது. ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு அடிபணிந்துதான் அதிமுக அரசு தமிழர்க்கு எதிரான இந்தச் சதிச்செயலைச் செய்துள்ளது. அழுகிப் புரையோடிய மனுவாத சவத்தை அருவருப்பவன் தமிழன் என்பது தெரிந்தும் இந்த அடாத செயலைச் செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இதனைத் திரும்பப்பெற வலியுறுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அணி 2 தேர்வுக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்துள்ளது. முதல்நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த அணி 2, பதவிக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரையில், இதில் முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என்று மொழிப்பாடத்தில் இருந்தும், மீதமுள்ள 100 கேள்விகள் பொதுஅறிவு பாடத்திட்டமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது அணி 2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டு பாடத்திட்டங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி, 175 கேள்விகள் பொதுஅறிவுக் கேள்விகளாகவும், மீதமுள்ள 25 கேள்விகள் திறனறிவுக் கேள்விகளாகவும் பாடத்திட்டம் உள்ளது. பொதுஅறிவு பகுதி பட்டப்படிப்பு அளவில் உள்ளது. திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு பகுதியானது பத்தாம் வகுப்பு தரத்திலும் உள்ளது. இரண்டு தாள்களும் சேர்த்து மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300 என்றும், குறைந்தபட்ச மதிப்பெண் 90 என்றும் உள்ளது. இதுவரையில் மொழிப்பாடம் தனிப்பகுதியாக இருந்து வந்தது. தற்போது மொழிப்பாடம் பொதுஅறிவு, திறனறிவு பகுதிக்குள் உட்புகுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. இதனால், அணி 2 மற்றும் அணி 2அ தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக நலம் விரும்பும் அரசியல்வாதிகள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,289.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.