Show all

மழைவருது, மழைவருது, நனையலாம் ஓடிவா! சென்னைவாழ் மக்கள் மகிழ்ந்து கொண்டாட்டம்

நார்வே வானிலை மையமும், சென்னை வானிலை மையமும் ஒரு சேர தெரிவித்தது போல, சென்னைக்கு மழை கிடைத்தது. மகிழ்ச்சியில் சென்னை வாழ் மக்கள்.

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை மக்களை மகிழ்வித்த மழைக் காட்சிகள், இணையத்தையே குளிர்வித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஏறத்தாழ இருநூறு நாட்களாக காத்துக் கிடந்து இன்று கிடைத்திருக்கிறது சென்னைக்கு மழை. 

கத்தரி வெயில் முடிந்துவிட்டாலும், கடும் வெப்பமும், அனல் காற்றும் மக்களை சிரமங்களுக்கு ஆளாக்கியது. கடும் வெப்பத்தில் பெரும்பாலான நாட்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெயிலை அனுபவித்து வந்த சென்னை மக்களை மகிழ்வித்திருக்கிறது தற்போதைய மழை!

வெப்பம் குறையவும், தண்ணீர் தேவை நிறைவடையவும் மழையை மிகப் பெரிதாய் நம்பியிருந்தார்கள் சென்னைவாழ் மக்கள். அவர்களின் எதிர்பார்ப்பில் ஒன்று நடந்திருக்கிறது. ஆம் வெப்பம் குறைந்திருக்கிறது. 

சோழிங்கநல்லூர், பழைய மாமல்லபுரச் சாலை, கோவிலம்பாக்கம், வேளச்சேரி, மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, போரூர், தரமணி, குன்றத்தூர், திருப்போரூர், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை குளிர்வித்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,189.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.