Show all

சிக்கினவன் செத்தான் என்கிற கதையாக பரபரப்பு கிளப்பப்பட்டது! கொஞ்சம் கொஞ்சமாக துப்பு துலங்கி வருகிறது: போராளி திருடர் ஆக்கப்பட்டசேதி

சந்தோஷ் வாங்கிய பழைய இருசக்கர வாகனம்- திருடப்பட்டு, திருடியவரால் விற்கப்பட்ட வாகனம் என்பதாக அறியப்பட்ட நிலையில், சந்தோசும் நண்பர்கள் மணி மற்றும் சரவணன் ஆகியோரும் இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய காவல்துறையினரின் கைது செய்யப்பட்டுள்ளனர். 

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் நடந்த போராட்டத்தின்போது வாய் திறக்காத அரசியல்வாதிகள்- 13 உயிர்கள் காவல்துறையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு- பொருட்காட்சிக்கு வருவதுபோல அடுத்தடுத்து வந்தார்கள். அப்படி வந்தவர்களில் இரஜினியும் ஒருவர். வந்த எல்லோரிடமும்தாம் தன் மகன், கோபித்துக் கொண்டதாக தெரிவிக்கிறார் சந்தோசின் தாய் வசந்தா.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 100 நாட்கள் நடந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளது 08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (22.05.2018) முன்னெடுக்கப்பட்டது. 

அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பெண்கள் உள்ளிட்ட 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். மேலும் காவல்துறையினர் தடியடியில் ஏராளமானோர் காயமடைந்தனர். 

இந்த துயர நிகழ்வுக்கு ஒரு கிழமைக்குப் பின்னர் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் இரஜினிகாந்த், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

சிகிச்சைபெற்றுவந்த காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய இரஜினியிடம் ஓர் இளைஞர், நீங்க யார்? எனக் கேட்டார். நான் ரஜினிகாந்த் என இரஜினி கூறியதும், எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். சென்னையில் இருந்து வருகிறேன் என இரஜினி கூறியதும், சென்னையிலிருந்து தூத்துக்குடி வருவதற்கு நூறு நாட்களாகுமா? எனக் கேட்டார். அப்போது ரஜினி இறுக்கமான முகத்துடன் அவரைக் கடந்து சென்றார். அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளரான சந்தோசின் அந்த காணொளி அப்போது தீயானது. 

இந்த நிலையில்:-  சந்தோஷ் வாங்கிய பழைய இருசக்கர வாகனம்- திருடப்பட்டு, திருடியவரால் விற்கப்பட்ட வாகனம் என்பதாக அறியப்பட்ட நிலையில், சந்தோசும் நண்பர்கள் மணி மற்றும் சரவணன் ஆகியோரும் இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய காவல்துறையினரின் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கில் சிக்கியவர், இரஜினியைக் கிண்டலடித்த சந்தோஷ், என அறியப்பட்டதும்- சிக்கினவன் செத்தான் என்கிற தமிழ் சொலவடைக்கு எடுத்துக்காட்டாக “பைக் திருட்டில் கைதுசெய்யப்பட்டார் சந்தோஷ் என்பதாகவும் மேலும் கற்பிக்கப்பட்ட கதைகளோடும் இணையத்தில் பரபரப்பாய் செய்தி பரப்பத் தொடங்கி விட்டனர் சிலர். அவசரமாக செய்தி வெளியிட்ட சில ஊடகங்களும் அதை உண்மையாக நம்பிப் பெரிது படுத்தவும் செய்தன. 

தீர விசாரித்த வகையில்: நடந்த நிகழ்வு வேறுவிதமானது என்பதாக கொஞ்சம் கொஞ்சமாக துப்பு துலக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சந்தோசின் பைக் விபத்துக்குள்ளாகி பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்து உள்ளது. அதனால் குறைந்த விலையில் பயன்படுத்தப்பட்ட பைக் வாங்க வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லிவந்திருக்கிறார். 

வங்கி கடனுக்கு வாங்கிய பைக் என்று தெரிவிக்கப்பட்டு, சந்தோஷ் வாங்கிய பைக் அவரை திருட்டு வழக்கு வரை கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும், வழக்கில் சிக்கிய நிலையில் அவரிடம் காவல்துறையினர் ஸ்டெர்லைட் போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என எழுதி வாங்க முயன்றதாகவும், மறுத்து பொய் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று அவர் குடும்பத்தார் தெரிவித்து விட்டதாகவும் தெரியவருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.