Show all

எழவு வீட்டில் பிறந்த குழந்தை! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் அறிவித்தாராம். ஆலையை மூடுவதற்கு முன்னதாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம் மேலும் சுற்றுசூழல் அமைப்பு அதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாம்.

தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 70 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை தமிழகம் முழுவதும் கதவடைப்பு அனைத்துக் கட்சிகளால் அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் 100 நாள் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி நிலைமை திரும்ப ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று புதிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது மகிழ்ச்சியைத் தரவில்லை. சல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றியைக் கொடுத்து விட்டு அசிங்கப் படுத்தினார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அசிங்கப் படுத்தியல்ல; அவலப்படுத்தி. பதிமூன்று உயிர்களை விலையாகப் பெற்றுக் கொண்டு தருவதை வணிகம் என்றும் சொல்ல முடியாது; வணிகத்தில் கைமாறுவது பொருட்கள். இங்கே நமது உரிமைக்கு நமது உயிர் விலையென்றால், அடுத்த உரிமைக் கேட்பாயா? என்கிற அச்சுறுத்தல். அச்சுறுத்தலை நமக்கு கொடுக்கிற இடத்தில் அவர்களை நாம் வைத்திருப்பதால்தானே? அப்புறப் படுத்துவோம் முதல் வேளையாக!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,797. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.