Show all

உப்புச்சப்பில்லாத ஓர் உணர்வு! வீரப்பனை வேட்டையாடிய காவல் துறை அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார்

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய காவல் துறை அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார். இது இன்றைய செய்தி.

யார் இந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று தெரிந்து கொள்ளலாமே என்று 'சந்தனக் கடத்தல் வீரப்பன்' என்று தலைப்பிட்டு இணையத்தில் தேடினால் 

7450 முடிவுகள் கிடைக்கின்றன.

முதல் முடிவான விக்கிபீடியா முடிவு சொல்லும் செய்தி இது.

வீரப்பன் எனப்படும் கூசு முனுசாமி வீரப்பன், சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல ஆண்டுகளாக வீரப்பன் தமிழக, கர்நாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.

வீரப்பன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் அவர் கொள்ளை செய்த பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்?

அரசின் கண்களில் படாமல் அரசு அதிகாரிகள் கண்களில் படாமல் எப்படி இவரால் இவ்வளவு பெரும் செயல்களை செய்தார் என்பதற்கும்!

அவரின் சொத்துக்களை எந்த வங்கியில் சேமித்து வைத்துள்ளார் என்பது போன்ற நியாயமான கேள்விகளுக்கும் இதுவரை ஆதாரங்கள் சமர்ப்பிக்க இயலவில்லை!

மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டை என்கின்ற பெயரில் வீரப்பன் கிராமத்திற்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறை பற்றி அந்த ஊர் மக்கள் செய்த புகார்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் பெண்கள் பாதிக்கப்பட்டதற்கும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தகவல் இல்லை.

மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன...

இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் காவல்துறையினர், வனத்துறை மற்றும் காவல் உயர் அதிகாரிகள் ஆவர்), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.

இந்திய மதிப்பு சுமார் 5 கோடி மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், இந்திய மதிப்பு சுமார் 130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காகவும் சொல்லப் பட்டு தேடப்பட்டுவந்தார். 

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார். வீரப்பனை சுட்டுக் கொன்றார்களா அல்லது கொன்று விட்டு சுட்டார்களா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மோரில் நஞ்சு கலந்து வீரப்பனை குடிக்க வைத்து விட்டுத்தான் சுட்டார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.

அடுத்து வேறுஒரு தகவல்: யானை தந்தம் கடத்தியதாக சத்தியமங்கலம் அறங்கூற்றுமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் உட்பட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் பில்பாளி என்கிற இடத்தில், துப்பாக்கிகள் மூலம் காட்டுயானைகளைக் கொன்று, தந்தங்களை கடத்தியதாக் 5 பேரை அதிரடிப்படையினர் பிடித்தனர்.

இவர்கள் 5 பேரும் சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், ஆறுமுகம், சண்முகம், ஜவஹர்,ராஜேந்திரன் உட்பட இந்தக் கடத்தலில் தொடர்புடைய பிரபல சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளி சந்திரகவுடா ஆகிய 7 பேர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு சத்தியமங்கலம் குற்றவியல் அறங்கூற்றுமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய வீரப்பன், சந்திரகவுடா, கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் இறந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.

அந்தத் தீர்ப்பில், வனத்துறையினர் தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்கத் தவறியதால் ஆறுமுகம் தவிர மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாகக் கூறி அறங்கூற்றுவர் குமாரசிவம் தீர்ப்பளித்தார். இது இரண்டு மாதத்திற்கு முன்னால் வந்த தீர்ப்பு.

வீரப்பன் இருந்த வரை, காவிரியில் நீர்தரமாட்டோம் என்று கர்நாடக அரசோ, கர்நாடக அமைப்புகளோ தெரிவிக்க அஞ்சினர் என்கிற கருத்து பரவலாக தமிழகத்தில் காணப்படுகிறது. 

எம்ஜியார் ஆட்சி காலத்தில் வீரப்பனை பிடிப்பதற்காக நேரத்தையும் உழைப்பையும், பொருளையும் வீணடிக்கத் தேவையில்லை என்று தெரிவித்ததாகப் பேசப்படுகிறது. 

வீரப்பன் யார்? எதற்காக அவரைச் சுட்டார்கள்? என்ற கேள்விகளுக்கு விடையில்லாமல், அப்படியா? விஜயக்குமார் ஓய்வு பெற்றாரா? என்று ஓர் உப்புச்சப்பின்மையையே உணர முடிகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,818.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.