03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரைவேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். மூன்றாவது இளவல் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் இல் நடைபெற்று வருகிறது. இதில் முத்தாண்டல் விளையாட்டில் பங்கேற்ற பிரவீன் வெண்கலம் வென்றுள்ளார். இளையோருக்காக நடைபெறும் இளவல் ஒலிம்பிக் போட்டிகளில் புதனன்று ஆடவர் பிரிவு முத்தாண்டல் போட்டி நடைபெற்றது. அதில் 34.18 மீட்டர் தூரம் தாண்டிய கியூபாவின் அலெக்சாண்ட்ரோ டியாஸ் தங்கமும், 31.85 மீட்டர் தூரம் தாண்டிய நைஜீரியாவின் எம்மானுவேல் ஒரிட்ஸ்மீவா வெள்ளிப்பதக்கமும் வென்றனர். மூன்றாம் இடம் பிடித்த தமிழக வீரர் பிரவீன் சித்திரைவேல் வெண்கலம் வென்றார். இவர் மொத்தமாக 31.52 மீட்டர் தூரம் தாண்டி மூன்றாம் இடத்தை பிடித்தார். சர்வதேச அளவில் பிரவீனுக்கு இதுவே முதல் பதக்கம். பிரவீன் தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பிரவீனின் தந்தை வேளா கூலி வேலை செய்து வருகிறார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு விடுதியில் தங்கி தடகள பயிற்சி பெற்று வந்தார். அங்கே இவரது திறமையைக் கண்ட இந்திரா சுரேஷ் என்ற பயிற்சியாளர், இவருக்கு சிறப்பு கவனம் எடுத்து பயிற்சி அளித்துள்ளார். பயிற்சியாளர் நாகர்கோவிலுக்கு மாற்றல் ஆகி சென்ற போது, பிரவீன் அவருடனே நாகர்கோவில் சென்று தங்கி பயிற்சி பெற்று வருகிறார். பிரவீனுடன் அவரது இளைய சகோதரரும் தடகள பயிற்சி பெற்று வருகிறார். பிரவீன் அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறார். இவர் தமிழ்மக்களின் பெருமிதம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,946.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



