Show all

நலங்கு வைத்து, குளிக்க அனுப்பப் பட்ட மணமகளைக் காணோம்! திருமண வீட்டில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

திருமண வீட்டில், நலங்கு முடிக்கப்பட்டு, குளிக்க சென்ற மணமகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மாவட்டத்தில் வெள்ளைக்குட்டை எனும் கிராமத்தில் வசிப்பவர் சின்னத்தம்பி. இவர் வேளாண் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் ஐசுவர்யா. சின்னத்தம்பி மகள் ஐசுவர்யாவுக்கு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் விநயாகத்துக்கும் திருமணம் நடைபெற பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐசுவர்யாவுக்கும், விநாயகத்துக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. தாலி கட்டுவதற்கு முன்பு பெண்ணிற்கு செய்ய வேண்டிய நடைமுறைகளான நலங்கு வைத்துள்ளனர். நலங்கு வைக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் ஐசுவர்யா குளிக்க சென்றார்.

 குளிக்க சென்ற மணப்பெண் ஐசுவர்யா வெகு நேரமாகியும் குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் ஐயம் அடைந்த உறவினர்கள் குளியலறை கதவை தட்டி அழைத்துப் பார்த்து உள்ளனர். அப்போது குளியல் அறையில் இருந்து எந்த சத்தமும் வராததால், கதவை திறக்க முயல கதவு திறந்திருந்தது. மணப்பெண் ஐசுவர்யா குளியல் அறையில் இல்லாததை பார்த்து  இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு ஐசுவர்யாவின் பேசிக்கு அழைத்துள்ளனர் அதிலும் எந்த பதிலும் இல்லை. அதற்கு பிறகு பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ஐசுவர்யாவை கண்டுபிடிக்க இயலவில்லை.   

திருமணம் நடக்க இருந்த நாளன்று மணப்பெண் காணாமல் போனது மணமகனின் தந்தை பிச்சாண்டியை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் மனமுடைந்த பிச்சாண்டி உடனடியாக தன் உறவினர்களுடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றார். 

சின்னத்தம்பி தன்னுடைய உறவினர்களுடன் சென்று அப்பகுதி காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகாரளித்தார். புகாரை வாங்கிய காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமண நாளன்று மணப்பெண் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,264.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.