19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில், சோபியா என்ற கனடா ஆய்வுக் கல்வி மாணவியுடன், மாணவியின் பாஜக குறித்த திறனாய்வைத் தாங்கிக் கொள்ள முடியாத அதே விமானத்தில் பயணித்த தமிழிசை அவரோடு சண்டை பிடித்ததுடன், சோபியாவிற்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சோபியாவை கைது செய்தனர், விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா அகவை23 என்பதும், அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, சோபியாவை கைது செய்த காவல்துறையினர், அவரை அறங்கூற்றுவர் முன் அணியப் படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் அறங்கூற்று காவலில் அடைக்க அறங்கூற்றுவர் உத்தரவிட்டார். இந்நிலையில், தூத்துக்குடியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இயக்குனர் பாரதிராஜா, நாம்தமிழர்கட்சி சீமான், எல்லையில்லாத இணைய ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தளங்களில் இருந்து கண்டனம் பதிவாகி வருகிறது. சோபியாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



