21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம், குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவு காரணம் இல்லை என தென் இந்திய குளிர்சாதன பழுதுபார்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்பேடு மேட்டுகுப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சரவணன், கலையரசி அவர்களது மகன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வீட்டினுள் மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்து கிடந்தனர். இவர்களது உயிரிழப்பிற்கு, குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவு காரணம் என கூறப்பட்டது. இந்தத் தகவல் அந்த பகுதி மட்டும் இல்லாமல் ஏசி எந்திரம் பயன்படுத்தும் அனைவரிடத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மூவர் உயிரிழப்பிற்கும் குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென தென்னிந்திய குளிர்சாதன பழுதுபார்ப்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர். இதுகுறித்து சென்னை அண்ணாநகர் அருகே செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில பொது செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் விபத்துக்கான காரணம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பொழுது, வீட்டு பயன்பாட்டு, மின்சார உற்பத்தி இயந்திரத்தைப் பயன்படுத்தியதாலும், மின் மாற்றியை மாற்றாமல் நேரடியாக பயன்படுத்தியதே என தெரிவித்துள்ளனர். அதேபோல் படுக்கை அறையின் உள்ளே வைத்து மின்சார உற்பத்தி இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி இயந்திரத்தில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு அறையில் முழுவதும் பரவியதால் மூவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அச்சப்பட வேண்டாம் உயிரிழப்பிற்கும் குளிர்சாதனக் கருவிக்கும்; எந்த வித தொடர்பும் கிடையாது. இதனால் குளிர்சாதன எந்திரத்தை பயன்படுத்த அச்சப்பட தேவையில்லை என தென்னிந்திய குளிர்சாதனக் கருவி பழுது பார்ப்போர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,933.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.