Show all

சுழன்று அடிக்கும் தமிழக அரசு! கெரோனாதொற்று, இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு

தமிழக மக்கள், மருத்துவ துறையினர், நலங்குத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் சரியாகிவிடும் என்பது தமிழகஅரசின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை என தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி சீனாவில் நோய்த் தொற்றை உருவாக்கியது. கெரோனா தொற்று தொடங்கியது ஒரு சிறு குழுவில்தான். 

இந்த நோய் தொற்றியவர்கள் இருமினால் காற்றின் மூலமும், மற்றவர்களைத் தொட்டால் அவர்கள் கைகள் மூலமும், அவர்கள் தொட்டுச் சென்ற பொருள்கள் மூலமும் என்று இந்த நோய்ப்பரவல் பல பரிமானங்களில் பரவியது. தொடக்கத்தில் வுகான் நகரம் முழுவதும் பரவியது. தொடர்ந்து சீனாவின் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. 

இந்தத் தகவலை எல்லாம் சீனா கண்டுபிடிப்பதற்கே ஒருமாதத்திற்கு பக்கமாக ஆகிவிட்டதால் சீனாவின் கையை மீறி சீனாவிற்கு வந்து சென்ற சீனாவோடு தொடர்பில் இருந்த நோயாளிகளோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இணைந்த அனைத்து நாட்டவர்களுக்கும் பரவத் தொடங்கியது. 

சீனா வுகான் நகர் தொடர்பைத் துண்டித்து மற்ற மாநிலங்களில் பரவலைத் தடுத்தது. ஆனால் மற்ற நாடுகள் சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து பரவலுக்கு எதிரான உடனடி தீர்வு காண முயலாததுதான் உலகத்தின் சோகம்.

இதனால் இந்தியா சீனாவுக்கு மட்டுமான தொடர்வைத் துண்டித்தால் போதும் என்ற நிலையைத் தாண்டி, கெரோனா பரவி விட்ட உலக நாடுகள் அனைத்தின் தொடர்பையும் துண்டிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி தாமதித்துக் கொண்டிருந்தது. 

இந்தியாவில் வெளிநாட்டு விமானங்கள் ஞாயிற்றுக் கிழமை முதல் ஒரு கிழமை வரை தரை இறங்கத் தடை விதித்து நடுவண் அரசு தற்போதுதான் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு விமான நிலையம் மூலமாக வரும் ஒவ்வொருவரையும் கண்காணித்து தமிழகத்தில் இதுவரை 3481 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக நலங்குத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயரந்து உள்ளது.  நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது தமிழகம் உலக நாடுகளிடம் இருந்து தமிழக மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்தல் போதும் என்ற நிலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தை கொரோனாவில் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது: உள்நாட்டு விமான பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்வண்டியில்  பயணம் செய்வதை 2 கிழமைக்கு பொதுமக்கள் தவிர்க்கவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர்.  அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற காஞ்சிபுரம் பொறியாளர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

தமிழகத்தில் தற்போது வரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குணமாகி வீட்டுக்குச் சென்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நேற்று, பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த 21 அகவை இளைஞருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக நலங்குத்துறை வெளியிட்டுள்ள அண்மை அறிவிப்பின்படி, கடந்த முப்பது நாட்களில் 3481 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக எண்ணிக்கை மற்றும் பரிசோதனை முன்னெடுக்கப் பட்ட நாள் குறித்து தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.

இந்த முன்னெடுப்புகளாலும், தமிழக மக்கள், மருத்துவ துறையினர், நலங்குத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடும் கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் சரியாகிவிடும் என்பது அரசின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை என தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.