21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஊதிய உயர்வு கேட்டு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்த கையோடு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது, அதே போன்று தற்போது ஊதிய உயர்வு கேட்டு மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த முடிவை எடுத்துள்ளதால் மின்கட்டணம் உயருமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து, 2ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த ஊதிய உயர்வு காலதாமதமாகி வருகிறது. இதனிடையே அறிவிக்கப்பட்ட 2.57 விழுக்காட்டிற்கு பதிலாக மின்வாரிய ஊழியர்களுக்கு 2.4 விழுக்காடு அடிப்படையில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்துள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி புதிய உத்தரவை அரசு அறிவித்துள்ளதற்கு சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் முடிவை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மின்வாரிய ஊழியர்கள் அறிவித்தனர். இதனையடுத்து கடந்த மாதத்தில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கு 30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119க்குள் (12.02.2018) முடிவு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஒப்புகொண்டபடி ஊதிய உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படாவிட்டால் 04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல் (16.02.2018) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக 10 தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டள்ளது. இதனிடையே மின்வாரிய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். எனவே வேலைநிறுத்த முடிவை மின்வாரிய தொழிலாளர்கள் திரும்பப்; பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவேளை அரசு நடத்தும் பேச்சுவார்த்தை போக்குவரத்து ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை போல தோல்வியடைந்தால் மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தம் உறுதியாகி விடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு அசவுகரியம் காத்திருக்கிறது. இது ஒருபுறம் என்றாலும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்புக்குப் பிறகு அரசு பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்தது. அதே போன்று இப்போது மின்வாரிய ஊழியர்களும் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த அரசின் கட்டண உயர்வு அறிவிப்பு மின் கட்டண உயர்வாகத் தான் இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,687
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



