வேளாண்பெருமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி
வரும் ஏப்ரல் 25ல் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தி.மு.க., தலைமையில் நடந்த
அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சென்னை
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர்
ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், வேளாண்பெருமக்களின் கோரிக்கை,
குடிநீர் பிரச்சனை , மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் , மதுவிலக்கு உள்ளிட்ட பிரச்னைகள்
குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேளாண்பெருமக்களின் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 25ம் தேதி பொது வேலை
நிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டம்
முடிந்ததும் நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்: வேளாண்பெருமக்களின் தற்கொலையைத் தமிழக
அரசு தடுக்கவில்லை. தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை தேவை. வேளாண்பெருமக்களின் தற்கொலைக்கு
இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்க போர்க்கால
நடவடிக்கை தேவை. அனைத்து
கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளோம். வேளாண்பெருமக்களின் பிரச்னைக்காக
சிறப்பு சட்டமன்றத் தொடர் கூட்டம் கூட்டப்பட வேண்டும். கரும்பு, நெல் ஆகியவற்றிற்கு
உரிய விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். வேளாண்பெருமக்களின்
பிரச்னைகள் வலியுறுத்தி வரும் 25 ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம். இதற்கு
தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



