மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டவரைவுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நூறு விழுக்காடும் நமதே என்பதனால்- நீட் வேண்டாம் என்று தொடங்கிய போராட்டம்- மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு உள் இட ஒதுக்கீடாவது வேண்டும் என்று கேட்ட நிலையில்- அதையும் போராட வேண்டியதாக்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உச்ச கட்டமாக இன்று ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற மருத்துவக் கனவு தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் சேர்த்துமான எஞ்சிய 92.5 விழுக்காடு இடத்தையும் போராடிப் பெற்றாக வேண்டிய கடமையை, இந்த அற்ப வெற்றியில் மறந்து விடக் கூடாது. மாநில அரசு மறக்கடிக்கவும் முயலாமல் இருக்க வேண்டும். நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய பாஜக அரசு அடாவடியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அந்தக் குழு பரிந்துரை அளித்திருந்தது. இந்தப் பரிந்துரையை ஆய்வு செய்த தமிழக அமைச்சரவை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்தது. கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்டவரைவு பதிகை செய்யப்பட்டு, அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட வரைவு, ஆளுநர் ஒப்புதலுக்காக நாற்பத்தி இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது. ஆளுநரைச் சந்தித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் சட்ட வரைவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்பிறகும் ஆளுநரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக, உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின்போது, உள் இட ஒதுக்கீடு சட்டவரைவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ஐந்து அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்து சட்டவரைவு தொடர்பாக வலியுறுத்தினர். அதேபோல, சட்டவரைவுக்கு உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் எனக் கோரி ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதினார். அவருக்குப் பதில் அளித்த ஆளுநர், 3 அல்லது 4 கிழமை காலக்கெடு தேவைப்படுகிறது. என்னைச் சந்தித்த அமைச்சர்களிடம் இதைத் தெரிவித்து விட்டேன் எனக் கூறியிருந்தார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், சட்டவரைவுக்கு ஒப்புதல் பெற ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தரவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும், சட்டவரைவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக சார்பில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதனிடையே, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டில், அனைத்துப் பிரிவிலும் இந்த 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு இந்த கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 7.5விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த 7.5 உள் ஒதுக்கீடு குறித்து கருத்து கேட்க, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மடல் எழுதியிருந்தாராம். அந்த மடலுக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்று பதில் மடல் எழுதியிருந்தாராம். அந்த மடலில், 7.5விழுக்காடு உள் இட ஒதுக்கீடு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க உள்ளதாக துஷார் மேத்தா தெரிவித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதையடுத்து, துஷார் மேத்தாவின் கருத்து ஆளுநருக்குக் கிடைத்த நிலையில், இந்தச் சட்டவரைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளாராம்.
இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஆறு மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இது தொடர்பாக ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற அறங்கூற்றுவர் பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



