Show all

நீட் போராளி அனிதா தற்கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச அறங்கூற்றுமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்:

இந்த விவகாரத்தில் அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடாது. மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்ற ஏமாற்றத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தத் துயரமே அவரை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. ஆனால், அதற்கான தீர்வு இதுவல்ல... அவருடைய இந்த முடிவை ஏற்க முடியவில்லை. மிகுந்த வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கான சட்டத்தை நடுவண் அரசு கொண்டு வந்தபோது அனைவருமே நீட் தேர்வு தேவையில்லை என போராட்டம் நடத்தினோம். இதில் பி.ஜே.பி மட்டுமே நடைமுறைபடுத்தியே தீருவோம் எனப் பிடிவாதமாக இருந்தது.

இந்த தற்கொலைக்கு முழுவதுமாக நடுவண் - மாநில அரசுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒட்டு மொத்தமாக அரசாங்கம்தான் அந்த மாணவியை தற்கொலைக்குத் தள்ளிவிட்டது என்றார்.

இது தொடர்பாக பேசிய பா.ம.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு:

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நடுவண் - மாநில அரசுகள்தான் வெட்கித் தலை குனிய வேண்டும். 1,176 மதிபெண்கள் பெற்ற அந்த மாணவியால் நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு பெரிய கடினம் அல்ல. எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது யாருடைய தவறு?

நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் செய்த தவறுக்குப் பலியாகி இருக்கிறாள் அனிதா. இனி அவளுடைய இழப்புக்கு இந்த அரசாங்கம் என்ன விலை கொடுத்தாலும் அது எந்த வகையிலும் ஏற்க முடியாது. மாணவர்களின் பிரச்னையைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்காமல், பதவியில் யார் இருப்பது என்ற சண்டையிலேயே இருந்தார்கள் ஆளும் கட்சியினர்.

இதனையடுத்து தமிழகத்தின் சில இடங்களில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை நம்பி தமிழக அரசு ஏமாந்துவிட்டது என துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் குழுமூர் என்ற கிராமத்தினைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தன்னை எதிர் மனுதாரராக சேர்த்துக் கொண்டார். அங்கு நீட் தேர்வுக்கு எதிராக மாநில மாணவர்களின் தரப்பினை முன்வைத்து வாதாடினார்.

ஆனால் தமிழக அரசின் வழக்கும், அனிதா தொடர்ந்த வழக்கும் உச்ச அறங்கூற்றுமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையானது நீட் அடிப்படையில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அனிதா 12ஆம் வகுப்புத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்துடன் மருத்துவ சேர்க்கைக்கான கட்ஆப் மதிப்பெண் 196.75 பெற்றுள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்ற, உச்ச அறங்கூற்றுமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய ஒரு ஏழை மாணவியின் வாழ்வானது, ஒரு தூக்கு கயிறில் முடிந்து போன சோகம் நிகழ்ந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.