Show all

உனக்கு வரியாக அழுவது மட்டுமல்லாமல் உயிரையும் எதற்கடா தர வேண்டும்.

தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது.

அப்படித்தான் நீட் தேர்வு போராளி அனிதாவும் மருத்துவக் கனவோடு குடும்பத்தால் அழகாக கட்டமைக்கப் பட்டாள்.

இன்றைக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டசமுக அமைப்பு தன் அங்கமாக கருத வேண்டிய குடும்பங்கள்மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல்,

மாநில அரசு, நடுவண் அரசு என்று இரண்டு நிலைகளில் தமிழ்க் குடும்பங்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அனைத்துக் குற்றப்பின்னனிகளுக்கும் பயிற்றுக் களமாக இருக்கிற சாராயக் கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்க் குடும்பங்களுக்கு தம்பிள்ளைகளை இற்றைச் சமுதாய அமைப்பில் இருந்து காப்பாற்றி சான்றோர்களாக வளர்த்தெடுப்பது கூடுதல் சுமையாக இருக்கிறது.

பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்விப்பது என்கிற பிள்ளைகளுக்கான கடமைகள் அனைத்தும் பெற்றோர்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது தமிழ்க் குடும்ப அமைப்புமுறையில்.

அவற்றுக்கான பொருளைப் பெற்றோர்கள் தொழில் மூலமாகவே ஈட்டுகின்றனர்.

நடப்பில் நம்மைப் பிணைத்துக் கொண்டுள்ள இற்றைச் சமுதாய அமைப்புமுறை தொழில் செய்து வருமானம் ஈட்டிய போதும் தம்மக்களின் உழைப்பைச் சுரண்ட வரியும் விதித்து மிரட்டி ஊடகங்களில் விளம்பரம்செய்து கடுமையாக வசூலிக்கவும் செய்து அதையும் ஆளும்பாழும் வீணடிக்கிறது. உலக வங்கியில் கடனும் வாங்குகிறது. மாதிரிச்சமுதாயமான குடும்பத்தில் பிள்ளைகளைப் பெற்றோர் தம் தொழில் வருமானத்தில் சிறப்பாகப் பேணும் போது பெரியகுடும்பமான சமுதாய அமைப்புமுறையால் சாதிக்க முடியாதா என்ன?

ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாக தமிழ்க் குடும்பங்கள் தொழில் செய்துதான் குடும்பத்தை நிருவகித்து வருகின்றன.

எந்த அரசும் தொழில் செய்தே நாட்டையும் நிருவகிக்க முடியும். மக்களிடம் எளிமையாகப் பெறும் வரிகள் மூலம் நாட்டை நிருவகிக்கும் வாய்ப்பின் காரணமாகத்தான் எல்லோரும் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசுக்கு சாராயக்கடை நடத்தும் வாய்ப்பும் இருப்பதால் எதற்கும் கையாலாகாதவர்களும் கூட போட்டியில் இணைந்து கொள்கிறார்கள். வரிகளைப் பெறுவதற்கான துறைகள் அனைத்தும் மறுஉற்பத்தி சாராத இழப்பு மட்டுமே என்கிற ஒருவழிப் பாதையாகி மக்களின் உழைப்பு ஏராளமாக வீணடிக்கப் படுகிறது.

உழைக்கும் மக்களுக்கு வரி ஏய்பாளர்கள் என்று பட்டம். தண்டிப்பதற்கு அறங்கூற்று மன்றங்கள். வரி என்ற பெயரில் உழைப்பைச் சுரண்டுவது குற்றமா? உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட மறுப்பது குற்றமா?

தமிழ்க்குடும்பம் தம்மையும் காத்துக் கொண்டு தம்மைப் பிணைத்துள்ள அயல்சட்ட சமுகத்திற்கு வரியும்செலுத்திக் கொண்டுதானே பயணித்துக் கொண்டிருக்கிறது.

நடுவண் அரசாக அமைந்து விட்ட மோடி அரசு- ஆதார், பணமதிப்பிழப்பு, உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி ஏராளமான சுமைகளை தமிழ்க் குடும்பங்கள் மீது திணித்தது மட்டுமல்லாமல்

தமிழ்க் குடும்பங்களுக்கு தமிழக அரசு கொடுத்து வந்த கல்வியிலும் குளறுபடி செய்து,

அனிதா என்கிற நீட் போராளியைக் கொலை செய்திருக்கிறது.

தாயின் தண்டனை நிறைவேற்றம்;

அண்ணனுக்கு இரண்டு அடிகள். குற்றம் செய்யாமல் தாய் கொடுத்த தண்டனையை சீரனித்துக் கொள்ள முடியவில்லை.

தந்தை வந்ததும் தொடர்கிறது மேல்முறையீடு.

தம்பியின் பொய்க்குற்றச்சாட்டு அம்பலமாகிறது. அண்ணனை தாய் அரவணனக்கிறாள். பரிசுப் பொருள்களோடு தந்தையின் சமாதானம்.

இப்படியான ஒரு தீர்ப்பை எதிர் பார்த்து உச்சஅறங்கூற்று மன்றம் சென்ற நீட் போராளி அனிதாவை கொலை செய்து விட்டது நடுவண் அரசின் வானளாவிய அதிகாரமான உச்ச அறங்கூற்று மன்றம்.

போராடி வாழும் ஐயாயிரம் ஆண்டு பழமையான என் தமிழ்க் குடும்பத்திற்கு எதற்கடா இரண்டு அரசுகள்? ஓங்களின் ஊது குழலாக வாசிக்கும் உச்ச அறங்கூற்று மன்றம்.

உனக்கு வரியாக அழுவது மட்டுமல்லாமல் உயிரையும் எதற்கடா தர வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.