25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு மலைக் கிராமங்களில் வாழ்ந்த தொல்குடிகளின் பண்பாடு அறியும் பொருட்டு ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஓவியர் மனோ, ராமகிருஷ்ணன், ஏற்காடு இளங்கோ, ஓவியர் ராஜகார்த்திக் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ‘ஏற்காடு மலை கிராமமான புளியங்கடை பகுதியில் பாயும் வாணியாற்றை இப்பகுதி மக்கள் கொள்ளுக்காட்டாறு என்றும், இப்பகுதியைக் கொள்ளுக்காடு என்றும் அழைக்கின்றனர். இந்த ஆற்றுப்படுகையை ஒட்டிய ராமசாமி என்பவரின் விளை நிலத்தில் இந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி, இறந்தவர்களைப் புதைக்கும் ஈமச்சின்னமாகும். இது நிலமட்டத்திலிருந்து 2 மீட்டர் ஆழமும், 158 செ.மீ., விட்டமும், கொண்டதாக அமைத்துள்ளனர். இதன் உட்பகுதி உடைந்து மண் மூடிய நிலையில் காணப்படுகிறது. இதன் வாய்ப்பகுதி 130 செ.மீ விட்டத்தில் 16 செ.மீ அகலமும், 18. செ.மீ., நீளம் மட்டும் கல்லால் மூடும்படியும், மற்ற பகுதி மண் மூடி சாதாரணமாகக் காட்சியளிப்பதால், இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையிலும் அமைந்துள்ளனர். இதில் இறந்தவரோடு அவர் பயன்படுத்திய பொருள்களையும், வைத்துப் புதைப்பார்கள். இதன்மூலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. அரசு முறையாக இப்பகுதியை ஆய்வுசெய்தால், இன்னும் அரிய வரலாற்றுத் தகவல்கள் வெளிவரும்’ என்றார். தற்போது இறந்தவர்களை எரிக்கவும் செய்கிறோம்; புதைக்கவும் செய்கிறோம். ஆனால் நம் பழந்தமிழ் மக்களிடம் இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் இல்லை. புதைக்கும் போது கூட தற்போது போல, ஏனோதானோ என்று குழியில் போட்டு, மண்ணை அப்படியே தள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை நம் முன்;;;னோர். இறந்தவர்கள் அளவுக்கு மண்தாழி செய்து அதில் வைத்தே புதைத்தார்கள். இறந்தவர்களை எரிக்கும் பழக்கம், ஆரியர்கள் போன்ற நாடோடி இனத்திற்கு உரிய வழக்கமாகும். இன்றையத் தமிழர்- மண், தொழில், கலை, கல்வி, அறங்கூற்று போன்ற உடைமைகளையெல்லாம் அயலவர்களிடம் ஒப்படைத்து விட்டு, உடலுழைப்புக் கூலியாகவும், நிருவாகக் கூலியாவும் தானே ஓடிக்கொண்டிருக்கிறோம். நாமும் இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை ஏற்றுக் கொண்டதில் பிறழ்வு ஏதும் இல்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,691
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



