தமிழகத்துக்கு அமித்சா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அதிமுக, ஒன்றிய அரசின் பாஜகவிற்கு சில கோரிக்கைகள் முன்வைத்து கூட்டணியும் உறுதியாகியுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றுமா ஒன்றிய அரசிலிருக்கும் பாஜக? துரைமுருகன் கூற்றுதான் பலிக்குமா? 07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் ஒன்றிய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்சாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தச் சந்திப்பின்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர். கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், இவர்கள் அனைவருமே பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சிக்குப் பிறகு, தான் தங்கியிருந்த மின்மினி உணவகத்திற்குத் திரும்பினார் அமித்சா. இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தங்களது வாகனங்களில் அந்த உணவகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பின்போது, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இது தவிர, தமிழக திட்டங்கள் சார்பாக சில கோரிக்கை மனுக்களை கடிதம் மூலமாக அமித்சாவிடம் அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்தக் கோரிக்கை மனுவில், காவிரி-குண்டாறு கோதாவரி-காவிரி இணைப்பு திட்டங்களுக்கு, ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், சென்னை மெட்ரோ தொடர்வண்டி விரிவாக்கத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு 50 விழுக்காட்டு முதலீட்டை வழங்க வேண்டும், தர்மபுரி, விருதுநகரில் மா துகில் பூங்கா அமைக்க தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி அளிக்க அந்தந்த அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும், சென்னையில் மருத்துவ உபகரணங்கள் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு உதவி வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தனது கோரிக்கை மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின்போது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக அமைத்த கூட்டணி அப்படியே தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



