09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு பள்ளியில் தமிழ் கற்பதற்காக அமெரிக்க மாணவர் காரைக்குடி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தி வருகின்றனர். முகநூலில் கணக்கு தொடங்கப்பட்டு பள்ளியைப் பற்றிய அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இப்பள்ளியின் செயல்பாட்டை அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் மாணவர் ஜெப்ரி அகவை 14. இணையத்தில் அறிந்துள்ளார். கோடை விடுமுறையில் காளையார்கோவிலில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்த இவர், இப்பள்ளியில் ஆர்வமுடன் தமிழ் கற்று வருகிறார். இதுகுறித்து மாணவர் ஜெப்ரி கூறுகையில், 'அமெரிக்க கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு முடித்து, 9ம் வகுப்பு செல்ல உள்ளேன். அங்கு தற்போது கோடை விடுமுறை. எனது தந்தையின் சொந்த ஊர் காளையார்கோவில் அருகே உள்ள வலையம்பட்டி. அவர் அமெரிக்க வேளாண்துறையில் பணியாற்றுகிறார். 18 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்றார். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையில் தாத்தா தேவதாஸ் வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஒரு சிறப்பு முயற்சியாக இங்குள்ள தமிழ் பள்ளிகளைப் பார்வையிட வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி முகநூல் மற்றும் இணையத்தில் தேடியபோது காரைக்குடி ராமனாதன் செட்டியார் பள்ளியின் செயல்பாட்டை அறிந்தேன். எனது தந்தை மூலம் தலைமையாசிரியர் பீட்டர் ராஜாவை தொடர்பு கொண்டு பள்ளியை பார்வையிட அனுமதி வாங்கினேன். பின்னர் இங்கு வந்தபோதுதான் எனக்கும் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கோடை விடுமுறையில் உள்ள 10 நாட்களும் படிக்க முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே கன்சாஸ் மாகாணத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கற்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். தவிர வீட்டில் அவ்வப்போது தமிழில்தான் பேசுவோம்' என்றார். தலைமையாசிரியர் பீட்டர் ராசா கூறுகையில், 'தமிழ்மொழி மீது உள்ள ஆர்வத்தால் ஒரு பத்து நாட்கள் மட்டும் படிக்க அனுமதி கேட்டனர். தினமும் காலையில் பள்ளிக்கு வந்து தமிழ் கற்றுத்தரப்படும் வகுப்பில் அமர்ந்து கவனித்து எழுதி வருகிறார். தவிர மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்வதால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது' என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,859.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



