Show all

பத்தாம் வகுப்பில் தேர்வின்றி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் திங்கட் கிழமை முதல் நடைபெறவிருந்தது. கொரோனா அச்சம் காரணமாக, மாணவர்களைத் தேர்வுகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குவதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என, பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அறங்கூற்றுமன்றத்தில் வழக்கொன்றும் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என, சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதன்மை அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி இன்று காணொளி மூலமாக ஊடகங்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தொற்று குறைய வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தேர்வு குறித்து அரசு ஆலோசித்தது. அதன்படி, பெற்றோர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனைக் காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை இரத்து செய்யப்படுகின்றன.

மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 விழுக்காடும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20விழுக்காடும் கணக்கிடப்படும்.

12-ம் வகுப்பில் ஏற்கெனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறுதேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தெலுங்கானாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், அடுத்த மாதத்தில் நடத்தப் போவதாக அறிவித்த, பத்தாம் வகுப்பிற்கான, நடுவண் கல்வி வாரியத் தேர்வும் இரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.