கேரள அரசு வருவாய்க்காக கோயில்களைத் திறப்பதாகவும், ஹிந்து அமைப்புகளின் கீழ் உள்ள கோயில்களை சூன் மாதம் முழுமைக்கும் திறக்கமாட்டோம் எனவும் ஹிந்து ஐக்கியவேதி அமைப்பு அறிவித்துள்ளது. 27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்தன. வழக்கமான சடங்குகள் நடைபெற்றாலும், பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முதல் வழிபாட்டுத்தலங்களைத் திறக்கலாம் என நடுவண் அரசு அறிவித்தது. ஆனால் தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பது குறித்து அரசு அறிவிக்கவில்லை. எனவே கோயில்களைத் திறக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. அதே சமயம் கேரள மாநிலத்தில் இன்று முதல் கோயில்கள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குருவாயூர் உள்ளிட்ட கோயில்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. அடுத்த கிழமையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ள ஹிந்து முன்னணி அமைப்பைப் போன்றது கேரளத்தின் ஹிந்து ஐக்கிய வேதி அமைப்பு. கேரள அரசு வருவாய்க்காக கோயில்களைத் திறப்பதாகவும், ஹிந்து அமைப்புகளின் கீழ் உள்ள கோயில்களை சூன் மாதம் முழுமைக்கும் திறக்கமாட்டோம் எனவும் ஹிந்து ஐக்கியவேதி அமைப்பு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் நிர்வாகம், கோயிலைத் திறப்பதில்லை என முடிவு செய்துள்ளது. ஆற்றுகால் பகவதி கோயில் டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு அனுமதிப்படி இன்று முதல் கோயிலைத் திறக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் இப்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டு கோயில் திறப்பதை மாற்றி வைத்துள்ளோம். மறு அறிவிப்பு வரும்வரை கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதுபோன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில், பழவங்னாடி கணபதி கோயில் உள்ளிட்டவை இன்று திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோயில்களைத் திறப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரளத்தைச் சேர்ந்த பாஜக நடுவண் அமைச்சர் வி.முரளிதரன் கூறுகையில், கோயில்களை திறக்க வேண்டும் என்று பக்தர்களோ, கோயில் கமிட்டியினரோ கோரிக்கை வைக்கவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு பக்தர்களை ஏமாற்ற நினைக்கிறது என்கிறார். வழிபாட்டுத்தலங்களை திறக்கலாம் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபிறகே கோயில்கள் திறக்கப்படுகின்றன. அதிலும், கோயிலைத் திறக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தன. இப்போது மாற்றிக்கூறுவதாகவும் இடதுசாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் அஞ்சுவது என்னவோ கொரோனாவிற்குதான். ஹிந்து அமைப்புகள் தாங்கள் கொரோனாவிற்கே பெரிதும் அஞ்சுவது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று நடிக்கின்றார்கள் என்றும் தெரிவிக்கின்றார்கள். கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதுகுறித்து கூறுகையில், கோயில்களைத் திறக்க வேண்டாம் என்ற ஹிந்து ஐக்கிய வேதியின் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். அதேசமயம் இந்தப் பாட்டில்; அவர்கள் திடீர் பல்டி அடிக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தேவசம் போர்டுக்கு எதிரான ஹிந்து ஐக்கியவேதியின் தீர்மானத்திற்குப் பின்னால் குறுகிய அரசியல் உள்ளது. திட்டமிட்டபடி கோயில்கள் திறக்கப்படும் என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.