அமைச்சர் செல்லூர் இராசுவின் எகிப்து வெங்காயத்திற்கான கருத்துப்பரப்புதல் இன்றைய தலைப்பாகி வருகிறது. 26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமைச்சர் செல்லூர் இராசுவின் எகிப்து வெங்காயத்திற்கான கருத்துப்பரப்புதல் இன்றைய தலைப்பாகி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே எகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்து அதன் தன்மையை பரிசோதித்தார். மேலும் எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும். இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது, எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழக அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டி வரும் திமுக ஆட்சி காலத்தில் தான் வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை இருந்தது. அடுத்து வரும் நாட்களில் தமிழகத்திலேயே 25,000 மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. தற்போது வெங்காய வரத்து அதிகமாக இருப்பதால், வரும் காலங்களில் வெங்காயம் விலை கணிசமாக குறையும் என கூறினார் அமைச்சர் செல்லூர் இராசு. உண்மை நிலவரம் என்னவென்றால்: வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களாக நம் நாட்டையே பாடாய்ப் படுத்தி எடுக்கிறது. இத்தனைக்கும் வெங்காய ஏற்றுமதியில் இந்தியாவுக்குத்தான் உலக அளவில் முதலிடம். பருவகாலத்தில் ஏற்பட்ட கோளாறு. பெய்யக்கூடாத அறுவடை நேரத்திலும்; பெய்து கெடுத்தது. விளைவு, அறுவடைக்குக் காத்திருந்த வெங்காயம் வயலிலேயே அழுகிப்போனது. பலர் கடந்த ஆண்டின் விலை வீழ்ச்சியால் சாகுபடியையே கைவிட்டனர். வெங்காயத்தின் பற்றாக்குறை நாடு முழுவதும் பேசு பொருளானது. மக்களின் தவிப்பை உணர்ந்த அரசு, எகிப்திலிருந்து 2,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது. சென்னை கோயம்பேடு சந்தைக்கும் எகிப்து வெங்காயம் வந்து சேர்ந்தது. ஆனால், அந்த வெங்காயத்தை வியாபாரிகளும் பொது மக்களும் வாங்க மறுக்கின்றனர். குறைவான அளவிலேயே விற்பனையாகியுள்ளது. எகிப்து வெங்காயம் அளவில் மிகப் பெரியதாகவும் மூன்றே வெங்காயங்கள் ஒண்ணே கால் கிலோவுக்கும் இருக்கிறது. சராசரியாக ஒரு வெங்காயம் 400 கிராம் என்ற அளவில் இருக்கிறது. தோல் சீவிய பீட்ரூட்டைப் போலிருக்கும் இந்த வெங்காயம், மணமற்றும் சுவையற்றும் இருக்கிறது. சற்றுக் கடினத்தன்மையுடனும் இருக்கிறது. இதனால் மக்கள் இதை விரும்பி வாங்குவதில்லை. ஒருமுறை வாங்கியவர்கள் மறுமுறை வாங்குவதில்லை. குடும்பத்தலைவிகள் அன்றாடம் இரண்டு வெங்காயம் என ஒரு கிலோ வாங்கினால், நான்கு நாட்களுக்காவது பயன்படுத்துவார்கள். இது அளவில் பெரிதாக இருப்பதும் ஒரு காரணம். இவற்றையெல்லாம்விட உணவுப் பாதுகாப்பு கிடங்குகள் பெருமளவில் நம்நாட்டில் இல்லை. வெளிநாடுகளில் விளைபொருள்களைப் பாதுகாப்பதற்கு பலவிதமான பண்டக சாலைகளும் கிடங்குகளும் இருக்கின்றன. அவற்றில் விளைபொருள்களைப் பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், மக்கள் தொகை மிகுதியாக இருக்கும் நம் நாட்டில் அத்தகைய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. உற்பத்தியாகும் காய்கறிகளில் மூன்றில் ஒரு பகுதி அழுகிப்போய் உரிய விலை கிடைக்காமல் வீணாவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. விளை பொருள்களை பதனிட்டோ உரிய முறையில் பாதுகாத்து வைத்தோ நமக்கு பற்றாக்குறையான நேரத்தில் நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெங்காயத்தை இறக்குமதி செய்வதால், இடைத்தரகர்களுக்கும் லாரிக்காரர்களுக்கும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும்தான் லாபமே தவிர, உழவர்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை. வியாபாரிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் பெரிய அளவில் லாபம் இல்லை. எகிப்து வெங்காயம், நம்ம ஊர் வெங்காயம்போல் சுவையாக இருக்காது. அதற்குக் காரணம் மண்ணின் வாகுதான் ஒவ்வொரு மண்ணிலும் விளையும் பொருள்களுக்கு ஒவ்வொரு வித்தியாசமான சுவை உண்டு. என்று சொல்வார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,364.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



