மதுரையில் கொரோனா முகாமில் கண்காணிக்கப்பட்ட இளைஞர் தப்பியோடியதும், சிறுமியைத் திருமணம் செய்ததும், அவரை காவல்துறைத் தனிப்படை அமைத்து கைது செய்ததும்- கொரோனா அச்சத்தில் கதிகலங்கி நிற்கும் மதுரை மக்கள் நடுவே அயலகம் சென்று திரும்பியவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மதுரையில் கொரோனா முகாமில் கண்காணிக்கப்பட்ட இளைஞர் தப்பியோடியதும், சிறுமியை திருமணம் செய்ததும், அவரை காவல்துறைத் தனிப்படை அமைத்து கைது செய்ததும்- கொரோனா அச்சத்தில் கதிகலங்கி நிற்கும் மதுரை மக்கள் நடுவே அயலகம் சென்று திரும்பியவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழபுங்குடி வலையதாரனிபட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர், துபாயில் பணியாற்றி வந்துள்ளார். அந்த இளைஞர் அதே ஊரைச் சேர்ந்த சிறுமி ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் போதெல்லாம் தனது காதலை இளைஞர் தீவிரப்படுத்தியுள்ளார். சம்மந்தப்பட்ட சிறுமியும் காதலை ஏற்ற நிலையில் புலனம் உள்ளிட்ட செல்பேசி உரையாடல் முலம் இளைஞருடனான காதலை நீட்டித்துள்ளார். இவர்களின் காதலுக்கு சிறுமி வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஞாயிறு அன்று சிறுமிக்கு திருமணத்தகுதிக்கான அகவை அடைவதால் மறுநாள் திங்களன்று அவருக்கு அவசர திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலையும் சம்மந்தப்ப்பட்ட சிறுமி இளைஞருக்குத் தெரிவித்ததால் அடுத்தமூன்று மாதம் கழித்து இந்தியா வரவேண்டியவர் அவசர அவசரமாக கடந்த வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து விமானம் முலம் மும்பை வந்தார். அங்கிருந்து மதுரை வந்து ஊர் திரும்பி, பெண் கேட்கலாம் என நினைத்திருந்த போது, மதுரை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததால், அவரை மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு கொண்டு வந்தனர். நாள் நெருங்க நெருங்க தன் காதலி கைவிட்டு போய்விடுவாளோ என்கிற அச்சத்தில் தன்காதலியை கரம் பிடிக்க திட்டமிட்டார் அந்த இளைஞர். அதிகாலையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் கடந்து சுவர் ஏறி குதித்து கொரோனா மையத்திலிருந்து தப்பினார். தனது காதலியையும் ஓரிடத்தில் வரச் செய்து நண்பர்கள் உதவியுடன் தாலி கட்டியுள்ளார். காலை நடந்த கணக்கெடுப்பில் இளைஞர் தப்பியது தெரிந்த நிலையில் நலங்குத்துறை துணை இயக்குனர் முத்துவேல் சார்பில் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞரின் வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அங்கு அவர் வரவில்லை. பின்னர் விசாரித்ததில் சம்மந்தப்பட்ட சிறுமி மாயமானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவகங்கை அருகே அவர்கள் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்த்த போது நண்பர்கள் உதவியோடு சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. கொரோனா தொற்று இருப்பவர் என சந்தேகிக்கப்படும் நிலையிலும், அவர் சிறுமி என்பதாலும் அவரை மீட்ட காவல்துறையினர், சிவகங்கையில் உள்ள காப்பகம் ஒன்றில் தனியாக வைத்து கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில் கண்காணிப்பை மீறி தப்பியோடிய இளைஞரைக் கைது செய்து மதுரை சின்ன உடைப்பு காப்பகத்திற்கு மீண்டும் அழைத்து வந்து அங்கு வைத்து அவனியாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



