கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த மருத்துவர் சேதுராமன் காலமானார் 14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்தவர் சேதுராமன். இவர் மருத்துவப் பட்டப்படிப்பும், தோல் சிகிச்சை நிபுணர் முனைவர் படிப்பும் படித்துள்ளார். பல்வேறு மருத்துவம் சார்ந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளார். தோல், முடி சிக்கல்களுக்கு பல தீர்வுகளை வலையொளி மூலம் வெளியிட்டுள்ளார். இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துவார். இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் தோல் நோய்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டுள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு அகவை 36. இவர் மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பகடி நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் 3 கதைத்தலைவர்களில் ஒருவராக நடித்தார். பின்னர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியைச் சேர்ந்த பொறியாளர் உமையாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் நள்ளிரவு 12 மணி அளவில் மாரடைப்பால் காலமானார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



