Show all

தமிழகத்தில் ஒரு அதிசய கிராமம்! 105 அகவை வரை நலமாக வாழும் மக்கள்

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  புதுக்கோட்டை அருகே ஆலங்குடி, வாடிமனைப்பட்டி எனும் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சைவம் அசைவம் என அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்துள்ளனர்.

ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்திற்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்திலிருந்து வந்த முத்தையா என்ற அடிகளார், மாமிசம் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறியுள்ளார். அதிலிருந்து அந்த கிராம மக்கள் சைவத்திற்கு மாறியுள்ளனர். கிராமத்தில் கோழி, ஆடு, வளர்த்தால் தானே அசைவ ஆசை வரும் என்பதால் ஆடு கோழி வளர்ப்பதையும் விட்டுவிட்டனர்.

பசுமாடுகளை மட்டும் வளர்த்து வருகின்றனர். கண்மாயில் மீன் வளர்த்தாலும் அவற்றை அவர்கள் பிடிப்பது இல்லை. அசைவம் சாப்பிடாத இந்தக் கிராமத்தினர் டாஸ்மாக் பக்கமும் செல்வதில்லை. இங்குள்ள பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் மது வாடையே இல்லை என்று பெருமை பொங்கக் கூறுகின்றனர்.

ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களும் அசைவமாக இருந்தால், சைவத்திற்கு மாறி விடுகின்றனர். இவர்களின் திருமணமும் வேத மந்திரங்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில்தான் நடைபெறுகிறது. திருமணத்திற்கு வரதட்சணை வாங்குவதில்லை.

இந்தக் கிராமத்தில் அடி, தடி, சண்டை என காவல் நிலையம் பக்கம் யாரும் சென்றதில்லை என்கிறார்கள். இவர்களில் பலர் 80 அகவை முதல் 105 அகவை வரை நலமாக வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இந்தத் தகவலைப் படிக்கும் போது, அந்தக் கிராமம் போல தமிழகத்தில் பலநூறு கிராமங்கள் அமைந்தால் எப்படி இருக்கும் என்று ஆசையாக இருக்கிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,910.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.