Show all

ஓர் ஆணியும் பிடுங்கப்படவில்லை! அறங்கூற்றுமன்றம் அளித்த 42நாட்கள் காலகெடுவில் 10நாட்கள் கடந்தும்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சாத்தியமற்றது. கடினமானது. எனவே, இந்த விசயத்தில் என்னால் இப்போது எந்த உறுதியையும் தர முடியாது என்றார் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின்;கட்கரி. அவரது இந்தக் கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

தமிழகம் வந்த பிரதமர் மோடி, காவிரி பிரச்சினை பற்றிப் பேசாமல் அமைதி காத்ததும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர முடியாது என நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது. நீட் தேர்வு விவகாரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவசரமாக செயல்பட்ட பாஜக அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடக தேர்தல் லாபத்துக்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என நடுவண் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அவரது கடமையை தட்டிக்கழிக்கும் செயலாகும். காவிரி பிரச்சினையில் காங்கிரஸும், பாஜகவும் தமிழகத்துக்கு துரோகங்களை மட்டுமே பரிசாக கொடுத்துள்ளன. தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் குழுவுடன் சென்று பிரதமரை சந்தித்து வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும். டெல்லியிலேயே முகாமிட்டு அறப்போராட்டம் மூலம் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். வாரியம் அமைக்கப்பட்ட பிறகே தமிழகத்துக்கு திரும்ப வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

நடுவண் அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து கண்டனத்துக்குரியது. சென்னை வந்த பிரதமர் மோடியிடம், காவிரி மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். ஆனால், மோடி அதனை உதாசீனம் செய்துள்ளார். இதன் மூலம் நடுவண் அரசு இப்பிரச்சினையைக் கிடப்பில் போட திட்டமிடுவதாகவே கருத வேண்டியுள்ளது. உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் மோடி, கட்கரி மீது தமிழக அரசு அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற நடுவண் அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பு கடும் கண்டனத்துக்குரியது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக உச்ச அறங்கூற்றுமன்ற உத்தரவை பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. தமிழகம் வந்த மோடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எவ்வித கருத்தும் கூறாமல் மவுனம் காத்தது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விசயத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

காவிரி மேலாண் வாரியம் 6 வார தத்தில் அமைக்க முடியாது என கூறிய நடுவண் அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு கண்டிக்கத்தக்கது 

காவிரி படுகையை எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை போகும் விதமாக பேசுவது ஏற்புடையதல்ல. உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பை மதித்து 6 வார காலத்திற்குள் காவரி மேலாண் வாரியம் அமைக்க நடுவண் அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு பல்வேறு தமிழகத் தலைவர்கள்  கூறியுள்ளனர்.

ஒருபிள்ளை பெற்றவளுக்கு உரியில சோறு, நாலுபிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவில சோறு என்று ஒரு பழமொழி உண்டு. 

எல்லா தலைவர்களும் ஆளாலுக்கு வெறுமனே கண்டனத்தைப் பதிவு செய்து விட்டு, நீட் எதிர்ப்பு போராட்டம் போல தோல்வியையே பரிசிலாகப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடாது. அறங்கூற்றுமன்றம் அளித்த 42நாட்கள் காலகெடுவில் பத்து நாட்கள் முடிந்து விட்டன. 42நாட்களும் வெறுமனே கண்டனங்களை பதிவுசெய்வதில் மட்டும் கடத்துவோமேயானால், ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,712. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.