16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் கோபுரங்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கிவந்த வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்தாதால் ஏர்செல்லுக்கு அளித்துவந்த மாற்று வசதியை அந்நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. இதனால், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் வாழும் ஏர்செல் சந்தாதாரர்கள் சமீபத்தில் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், செல்பேசி கோபுரங்களுக்கான இட வாடகை பாக்கியையும் செலுத்த முடியாத நிலையில் இந்நிறுவனம் கடன் சுமையில் சிக்கி தள்ளாட்டம் கண்டது. ஏர்செல் நிறுவனத்தின் நிதி நிலவரத்தை சீரமைக்க அதன் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் அந்நிறுவனம் தற்போது 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடனில் மூழ்கி விட்டது. பயன்பாடின்றி தங்கள் கைவசமுள்ள ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு அலைக்கற்றையை பிற நிறுவனங்களுக்கு விற்று பணமாக்கி, பொருளாதார நிலைக்குலைவை சீரமைத்து கொள்ள முயன்றபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்கில் இந்த திட்டத்துக்கும் உச்சஅறங்கூற்று மன்றம் கடந்த ஆண்டு தடை விதித்து விட்டது. இந்நிலையில், தங்களை திவால் ஆன நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனு செய்துள்ளது. இந்த முறையீட்டை தீர்ப்பாயம் ஏற்று கொண்டால் தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைத்தவர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் நிரந்தர பணியாளர்கள் சுமார் 500 பேர் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். தீர்ப்பாயத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான மேல் நடவடிக்கையாக, அறங்கூற்றுமன்றத்தால் நியமிக்கப்படும் நடுவர் ஒருவர் கடன்காரர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துவதற்கான வரைவு திட்டத்தை 270 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். அல்லது, தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் திவால் ஆன நிறுவனமாக ஏர்செல்லை அறிவிக்க வேண்டும். பின்னர், ஏர்செல் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து மற்றும் பங்குகளை கையப்படுத்தி விற்றோ, அல்லது ஏலத்தில் விட்டோ, ஓரளவுக்கு கடனை அடைக்கும் என தெரிகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,712
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



