Show all

செம்பருத்தி தொடரால் இரண்டு நாட்கள் தாங்க முடியாத துயரம் அடைந்த வழக்கறிஞர்! காவல்துறை ஆணையரிடம் புகார்.

03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில், ஹிந்து கடவுள்களான ராமன் - சீதையை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாகவும், மக்களின் மனதைப் புண்படுத்தும் அந்தக் காட்சியை உருவாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

செம்பருத்தி தொடரில், வீட்டிலிருக்கும் கதைத்தலைவன் தன் சித்தியிடம், ராமனும் - சீதையும் இணையாக இருக்கும் ஒரு சிலையைக் காண்பித்து, நானும் என் காதலியும் அந்த கடவுள்களைப் போலவே இருக்கிறோம் என்று வர்ணித்தார். உடனே அதைக்கேட்டு கோபமடைந்த சித்தி, அந்தச் சிலையை தூக்கி கீழே போட்டு உடைத்துவிட்டார். 

அதை தெலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த வழக்கறிஞர் திடுக்கிட்டுப் போனாராம். அவர் மனம் மிகவும் வேதனையடைந்ததாம். உடனே தன் நண்பர்களுக்கு செல்போசியில் அழைத்து தகவலைச் சொல்லி தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டாராம். இருப்பினும் அந்தக் காட்சியானது தொடர்ந்து 2 நாள்களாக தன் மனதை உறுத்திக்கொண்டே இருந்ததாம். எனவேதான் தன்னுடைய நண்பர்களான வசந்த் மற்றும் ஹிந்து வழக்கறிஞர் முன்னணி கோட்டச் செயலாளர் பிரபு ஆகியோருடன் நேரில் சென்று ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு வந்தாராம். ஹிந்து ராஷ்டிரம் முழுவதும் வணங்கப்படும் ஹிந்துக் கடவுளை அவமரியாதை செய்யும் விதமாகவும், ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும்படியும் அமைந்திருந்த அந்தக் காட்சியைப் படமாக்கியது குற்றவில் தவறாம். 

கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை ரணமாக்கும் முயற்சியாகவே அந்தக் காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு மேலோங்கும். அதன்மூலம் மன உளைச்சலும் ஏற்படும். எனவே, அந்த தொலைக்காட்சித் தொடரை தயாரித்தவரையும், இயக்கியவரையும், அதில் நடித்த நடிகர்கள்மீதும், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின்மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அப்படிச் செய்தால்தான் இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை ஆணையரும் கூறியிருக்கிறாராம் என்று தெரிவித்துள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,853. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.