பழைய இறைச்சி நஞ்சு உணவாகி விடும் என்று விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவை- என்பதை உணர்த்தும் சேதி இதில் இருந்தாலும், சோகம் நெஞ்சை கனக்கச் செய்கிறது. 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விநாயகமூர்த்தி இவரது மனைவி உமா ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டு ஆகிறது. இராகுல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் இந்த இணையர். உமா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் உமா மீதமான ஊண்புலவை சேமக்கலனில் வைத்து பழைய ஊண்புலவைச் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் உமாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், உமாவின் உயிரிழப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெருஞ் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,147.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.