Show all

தமிழ்நாடு அரசு முன்னெடுத்த 74வது விடுதலை நாள் கொண்டாட்டம்!

இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் விடுதலைநாள் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் விடுதலைநாள் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்திறங்கிய முதல்வர் பழனிசாமி தேசியக் கொடி ஏற்றினார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதல்வர், நான் மக்களிடம் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். விடுதலையின் பலனை அனைவரும் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கொரோனா உயிரிழப்பு விழுக்காடு குறைவாக உள்ளது. கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வெல்வோம் என்று உறுதிபடக் கூறுகிறேன்.
 
தமிழ்நாட்டு அரசின் நிதி ஆதாரத்தைக் கொண்டு கொரோனா தடுப்புப் பணிக்கு ரூ.6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது. 64,661 வெளிநாடு தமிழர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

விடுதலைப் போராட்டத் தியாகிகளின் ஓய்வூதியம் 16,000 த்திலிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தப்படும். வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும்.

சென்னை கடற்கரையில் செயலலிதா நினைவிட பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள 1,29,000 படுக்கைகள் தயாராக உள்ளன. கொரோனாவை எதிர்கொள்ள 1800 மருத்துவர்கள், 7 ஆயிரம் செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக இலவச குடும்ப அட்டைக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று பேசினார்.

மேலும், வட மாநிலங்களில் போதிய கல்வியும், வாழ்மானமும் கிடைக்கப்; பெறாமல் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து பணியாற்றி வந்த 4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு பத்திரமாக அனுப்பப்பட்ட தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டினார்.

விரைவில் பொருளாதார இயல்பு நிலையை தமிழகம் எட்டும் என்று பேசி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது விடுதலை நாள் உரையை நிறைவு செய்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.