02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மதுக்கடை திறப்பில் ஆர்வம் காட்டும் அரசுக்கு தீர்ப்பு வழங்க இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றன. இதனை எதிர்த்து கமல் உள்ளிட்டோரால் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மக்கள் நீதி மய்யம், மக்கள் அதிகாரம், மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் முன்னெச்சரிக்கை மனுக்கள் பதிகை செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச அறங்கூற்றுமன்றம், கடைகளை மூடும்படி உயர்அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கீச்சுவில் கூறியுள்ளதாவது:- உயர் அறங்கூற்றுமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத ஆர்வத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது இவ்வாறு அவர் கூறியுள்ளார். நாளை மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்படவுள்ளன. முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒருநாள் முதல்வர் போல! ஏழுநாள் மதுவை நிறுத்திய பெருமிதத்தோடு உலா வந்தார் கமல். படத்தில் அர்ஜுன் வென்றதாகக் காட்டினார்கள். நடப்பு உண்மையில் இரகுவரன்தான் வென்றிருக்கிறார். முதல்வன் திரைப்படம் 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் அர்ஜூன், இரகுவரன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் மொழிமாற்றம் செய்து தெலுங்கில் வெளிவந்து அங்கும் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது. இத் திரைப்படம் அதே ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது பெற்றது.
நாளை மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்படவுள்ளன. முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக வந்தது போல, ஏழுநாள் மதுவை நிறுத்திய பெருமிதத்தோடு உலா வந்தார் கமல்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



