Show all

முதல் பரிசு ரூ.50,000! தேர்தல் விழிப்புணர்வு வினாடி- வினா போட்டி

தேர்தல் நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளவும், நமக்கு தேர்தல் குறித்து எவ்வளவு தெரியும் என்று தெரிந்து கொள்ளவும், நமக்கு தேர்தல் குறித்து நிறைய தெரிந்திருந்தால் பரிசைத் தட்டவும் ஒரு வாய்ப்பு.

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேர்தல் ஆணையத்தின் சார்பில், வரும், ஞாயிற்றுக் கிழமை முதல், இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதாசாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டமன்றத் தேர்தலில், பொது மக்கள் பங்கேற்பை அதிகரிக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில அளவில், இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியின் அனைத்து சுற்றுகளும், 'goal Quiz sports' என்ற, வலையொளி இணையவழி தளத்தில் நடத்தப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக, முதல் நிலை போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல் நிலை போட்டி, மூன்று சுற்றுக்கள் உடையது. முதல் சுற்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை, 4:00 மணி; இரண்டாம் சுற்று, எதிர்வரும் திங்கட் கிழமை காலை, 11:00 மணி; மூன்றாம் சுற்று, அன்று மாலை, 4:00 மணிக்கு நடத்தப்படும். இணையதளத்தில், கருத்துக்களை தெரிவிக்கும் பகுதியில், சரியான பதில்களை முதலில் பதிவிடுகின்றவரே, அடுத்த சுற்றுகளில் பங்கேற்க தகுதியானவர்.

ஒருவர் ஒரு முறை மட்டுமே, பதிலை பதிவிட வேண்டும். மொத்தம், 36 குழுக்கள், அரையிறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும். அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுகள் குறித்த அறிவிப்பு, போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். தேர்தல் மற்றும் பொது அறிவு சார்ந்து போட்டிகள் நடக்கும். ஒரு அணி அதிகபட்சம், இரண்டு நபர்களை கொண்டதாக இருக்க வேண்டும்.

போட்டியில் பங்கேற்க அனுமதி இலவசம். முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். முதல்நிலை மற்றும் அரையிறுதி போட்டிகளில், சரியான பதில் அளிப்போருக்கு, ஆறுதல் பரிசு வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.