Show all

தமிழக அரசு அதிரடி! குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக,குடும்ப அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, குடும்ப அட்டை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடையே பேசுகையில், ‘தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் குடும்ப அட்டைக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதோடு பல்வேறு நலவாரியத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரையில் உதவித் தொகை வழங்கியுள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம். குடும்ப அட்டை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம்’ என்று கூறினார்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்தார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கொரோனா ஊரடங்கு காரணமாக சிறு, குறு தொழில்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் வேளாண் கடன்களை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எனவும் அவர் உறுதியளித்தார்.

ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு சார்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதோடு வேளாண்மை, சிறு கடைகள், கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும் அவர் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.